search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    சாலைகளில் பேனர் வைத்தால் 1 ஆண்டு ஜெயில்- தமிழக அரசு எச்சரிக்கை

    ஐகோர்ட்டு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார்.

    பேனர் கலாசாரத்தால் பெண் ஒருவர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்ததுடன் பேனர் வைக்கக் கூடாது என தங்கள் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    குமரி மாவட்டத்திலும் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேனர் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக, உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக் கூடாது.

    இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு ஐகோர்ட்டு உத்தரவு விவரம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

    ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை அரசியல் கட்சியினர் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

    அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் நிறுவ தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படும்.

    ஐகோர்ட்டு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி நெடுஞ்சாலை மற்றும் நடைபாதைகளில் வைக்கும் பொருட்டு டிஜிட்டல் பேனர்கள் அச்சிடுபவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் அவசர, அவசரமாக அகற்றப்பட்டன.
    Next Story
    ×