search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்கி வாசுதேவ்
    X
    ஜக்கி வாசுதேவ்

    அடுத்த 12 ஆண்டுகளில் காவிரி நதியை பெருக்கெடுத்து ஓட வைக்க உறுதி ஏற்போம் - ஜக்கி வாசுதேவ்

    அடுத்த 12 ஆண்டுகளில் காவிரி நதியை பெருக்கெடுத்து ஓடவைக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.
    ஓசூர்:

    தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைகாவிரி முதல் திருவாரூர் வரை அவர் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்காக, கடந்த 3-ந்தேதி தலைகாவிரியில் இருந்து புறப்பட்ட அவர் மடிகேரி, ஹன்சூர், மைசூரு, மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக நேற்று தமிழகத்தின் ஓசூருக்கு வந்தார்.

    ஓசூரில் அத்திப்பள்ளியில் உள்ள கர்நாடக தமிழக எல்லையில் விவசாயிகள், ஓசூர் முக்கிய பிரமுகர்கள், பி.எம்.சி. கல்வி குழுமம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர், அதியமான் பொறியியல் கல்லூரியில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 4 போர்கள் நடந்துள்ளன. 3 போர்கள் பாகிஸ்தானுடனும், ஒரு போர் சீனாவோடும் நடந்துள்ளது. இதில் இரு தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நம் தேசத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். நம் தேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காவிரி வடிநிலப் பகுதிகளில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதைவிட இன்னொரு பேரழிவு நிகழ வேண்டுமா?

    கடன் பிரச்சினையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், உண்மையில் நிலத்தில் வளமான மண்ணும் தேவையான தண்ணீரும் இல்லாதது தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு அடிப்படை காரணம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை தொடங்கி உள்ளோம்.

    எவ்வளவு கருத்து மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருந்தும் நம் தேசத்தையும், மண்ணையும் காப்பதற்காக இங்கு ஒன்று கூடியுள்ள அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என அனைத்து கட்சியினரையும் பார்த்தாலே இவ்வியக்கம் கட்டாயம் வெற்றி பெறும் என்பது புரிகிறது.

    அடுத்த 12 ஆண்டுகளில் காவிரி நதியை மீண்டும் பழைய படி பெருக்கெடுத்து ஓடவைக்க இங்குள்ள அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ சத்யா, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

    முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் விவசாய நிலங்களில் மரங்கள் நடுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடைக்கான காசோலையை ஜக்கி வாசுதேவிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர், ஓசூரில் இருந்து புறப்பட்ட ஜக்கி வாசுதேவ் தர்மபுரி வழியாக இன்று(வியாழக்கிழமை) மேட்டூர் செல்கிறார். பின்னர், அங்கிருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்கிறார். சென்னைக்கு 15-ந்தேதி வருகிறார். பேரணியின் நிறைவு நிகழ்ச்சி கோவையில் 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    Next Story
    ×