search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் வழிந்து செல்லும் காட்சி.
    X
    அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் வழிந்து செல்லும் காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்தது. ஆனால் இடையிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அவ்வப்போது நெல்லை மாவட்டத்தில் மழை பெய்தது.

    இதுபோல நேற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதி அணை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் கொடுமுடியாறு, பாபநாசம் அணை பகுதியிலும் ஓரளவு நன்றாக மழை பெய்தது.

    செங்கோட்டை, புளியரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பொதிகை மலைப்பகுதியில் மழை மேக கூட்டங்கள் கூடி அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வழக்கமான வெயில் தலைகாட்டவில்லை. கடந்த சில நாட்களுக்கு பிறகு மீண்டும் விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு பிறகு விடிய விடிய நேற்று இரவு 11 மணிக்கு பெய்த மழை பகல் வரை நீடித்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    குண்டாறு அணை கடந்த 20 நாட்களாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்நிலையில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் உள்ள அடவி நயினார் நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து நீர் வழிந்தோடி வருவதால் குற்றாலம் வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அடவிநயினார் அணைகட்டு பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இப்பகுதியில் தொடர் மழையால் ஆறு, ஏரி, குளம், கால்வாய், ஓடைகளில் நீர்வரத் தொடங்கியதால் பிசான சாகுபடிக்கான வேலைகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2341.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1404.75 கன அடி தண்ணீர் பாசனம் மற்றும் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.

    இதனால் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 108 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 109.65 அடியாக உயர்ந்து இருந்தது. இன்று காலை மேலும் ஒரு அடி உயர்ந்து 110.70 அடியாக உள்ளது.

    இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.12 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 119.16 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் சற்று குறைந்து இன்று காலை 51.60 அடியாக உள்ளது.

    ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு ஆகிய 5 அணைகள் நிரம்பி விட்டது. அங்கு தொடர்ந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.

    தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் கடந்த ஒரு மாத காலமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. மெயினருவியில் இன்று ஆர்ச் மீது தண்ணீர் விழுந்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
    Next Story
    ×