search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவி வரவேற்றனர்
    X
    திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவி வரவேற்றனர்

    மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் இன்று முக்கொம்பு வந்தடைந்தது

    மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர்.
    திருச்சி:

    டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் அப்போது தண்ணீர் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக மற்றும் குடிநீர் தேவைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீரை காவிரி ஆற்றில் திறந்துவிட்டார்.

    இந்த தண்ணீர் நாமக்கல், கரூர் வழியாக நேற்று கரூர் மாயனூர் கதவணைக்கு வந்தது. தொடர்ந்து மாயனூர் கதவணையில் இருந்து சீறிப் பாய்ந்த நீர் இன்று காலை 6 மணிக்கு பெட்டவாய்த் தலைக்கு வந்து சேர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி கரூர் மாயனூர் கதவணைக்கு மேட்டூர் அணை மற்றும் பவானி அணை தண்ணீரை சேர்த்து 10,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பவானி அணை தண்ணீர் கூடுதுறை பகுதியில் காவிரியுடன் இணைகிறது.

    இந்த தண்ணீர் இன்று மதியம் 12.30 மணியளவில் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரி தாயை வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க விவசாயிகள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

    முக்கொம்பு அணையில் காவிரி தண்ணீரை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்திய விவசாயிகள்

    இதேபோல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர். பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள 41 மதகுகளில் 2 மதகுகளில் இருந்து கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் மதகுகளை திறந்துவைத்தார்.

    இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது இரவில் கல்லணையை சென்றடையும். அங்கிருந்து நாளை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் முலம் திருச்சி டெல்டா மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெறும்.

    தொடாந்து மேட்டூரில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 110 அடியாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே தற்போது மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அங்கு மீண்டும் மழை பெய்து மேட்டூருக்கு அதிக தண்ணீர் வந்தால் திருச்சி காவிரி ஆற்றின் மூலம் முக்கொம்புக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

    மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்தன. தற்போது அங்கு தற்காலிக காப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் முக்கொம்பு அணைக்கு பாதிப்பு வராது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல மாதங்களுக்கு பின்னர் அகண்ட காவிரியில் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்வதை பார்த்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முக்கொம்பு அணையில் தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆனால் தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் விவசாயம் செய்யபோதுமானதாக இருக்காது. எனவே 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். அனைத்து நீர் நிலைகளும் நிரம்பும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினர்.



    Next Story
    ×