search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் சிக்கினர்

    ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற 3 வாலிபர்களை அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த 17-ந் தேதி கோபி என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றார். அவர் தனது ஏ.டி.எம். கார்டை எந்திரத்துக்குள் செலுத்தியபோது சிக்கிக் கொண்டது.

    வழக்கத்துக்கு மாறாக எந்திரத்தில் சிறிய கேமராவுடன் கூடிய ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இது பணம் எடுக்க வருபவர்களின் ரகசிய எண்களை பதிவு செய்து பணம் திருடுவதற்கான ‘ஸ்கிம்மர்’ கருவி என்பது தெரிந்தது.

    இதுகுறித்து கோபி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அயனாவரம் போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டனர். அங்கிருந்த ஸ்கிம்மர் கருவி அகற்றப்பட்டது.

    ஏ.டி.எம். எந்திரம் இருந்த அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், அயனாவரம் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற 3 வாலிபர்களை அயனாவரம் போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் பெயர் இர்பான், அல்லாபகாஸ், அப்துல்ஹாதி என்பது தெரிய வந்துள்ளது.

    கைதான 3 பேரும் யார்? இதற்கு முன்பு ஏ.டி.எம். மையங்களில் இது போல் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடித்தார்களா? வேறு கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×