search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கியது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய தொடங்கியது

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 7 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்ததால் காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 24 ஆயிரத்து 712 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 13 ஆயிரத்து 901 கன அடியாக சரிந்தது.

    அணையில் இருந்து நேற்று 24 ஆயிரத்து 215 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 17 ஆயிரத்து 825 கன அடியாக குறைக்கப்பட்டது.

    கடந்த 22-ந் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பிய நிலையில் நேற்று வரை அணையின் முழு கொள்ளளவான 120 அடிக்கும் மேல் நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து குறைந்ததால் இன்று நீர்மட்டம் 119.82 அடியாக சரிந்தது.

    இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×