search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மலைப்பகுதியில் மழை - மெயினருவி, ஐந்தருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு
    X

    குற்றாலம் மலைப்பகுதியில் மழை - மெயினருவி, ஐந்தருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

    குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.
    தென்காசி:

    நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் ஆரம்பமாவது வழக்கம். தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் வரை சீசன் நிலவும். சில ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் தொடக்கம் வரை சீசன் இருக்கும்.

    இந்த காலங்களில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டும். அதில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த ஆண்டு மே மாத இறுதிலேயே சீசன் ஆரம்பமானது. தொடர்ந்து மலைப்பகுதிகளில் மழை பெய்ததால் சீசன் களைகட்டியது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையினால் குளுகுளு காலநிலை நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லாமல் வெயில் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    மெயினருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் வெகுநேரம் காத்து நின்றே குளித்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் நேற்று மாலையிலும், ஐந்தருவியில் இரவிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடைவிதித்தனர்.

    இந்த நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் அந்த அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அருவிகளில் தண்ணீர் குறைந்ததும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    Next Story
    ×