search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரசைவாக்கத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
    X
    புரசைவாக்கத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

    மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கண்டித்து புரசைவாக்கம், பட்டாளத்தில் கடைகள் அடைப்பு

    மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கண்டித்து புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று கடைகள் அடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொதுமக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.85 ஆயிரம் கோடி செலவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாதவரம்- சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஜெமினி, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, ஆழ்வார்பேட்டை கச்சேரி ரோடு, மந்தைவெளி சாலை, அடையார் வழியாக சிறுசேரியை சென்றடைகிறது.

    இந்த திட்டத்துக்கு புரசைவாக்கம், பட்டாளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மெட்ரோ வழித்தட பாதை பட்டாளம், டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் வழியாக அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் வியாபாரிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். புரசைவாக்கத்தில் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    ஓட்டேரியில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக நேரடியாக கெல்லிஸ் செல்லும் வகையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இப்பகுதியில் உள்ள சுமார் 1000 கடைகள் மூடப்பட்டு இருந்தது.

    புரசைவாக்கம் தானா தெருவில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் 500 வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    புரசை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூ‌ஷணம், செயலாளர் வி.ராமலிங்கம், பொருளாளர் பி.கே.ஹரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ப.தேவராஜ், நிர்வாகிகள் இப்ராகிம், ராயல்அலி, கமல், ரவி, அப்துல்லா, சுதா, அருண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் இன்று புரசைவாக்கம், பட்டாளம், டவ்டன் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. #MetroTrain
    Next Story
    ×