search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்: சீமான்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்: சீமான்

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறங்குகிறது.

    கடந்த முறை பணப்பட்டு வாடா புகார் காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த முறையும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடா இருக்கும் என்றும், அதனை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் இப்போதே கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி வாக்காளர்களை சந்திக்கும். எங்களது பலம் என்ன? என்பதை நிரூபிப்போம். இனி வரும் காலங்களில் சின்னங்கள் வெற்றியை தீர்மானிக்காது.

    வேட்பாளர்களின் எண்ணங்களும், கருத்துக்களுமே வெற்றியை நிர்ணயிக்கும் காலம் நிச்சயம் வரும். நீண்ட காலமாக ஒரு கட்சியிலேயே இருப்பவர்களுக்கு மட்டுமே தங்கள் கட்சியின் சின்னம் வெற்றி சின்னமாக தெரியும். இதற்கு முன்னர் பிரபலமாக இருந்த எத்தனையோ சின்னங்கள் காணாமல் போய் இருக்கின்றன.

    இளம் தலைமுறை வாக்காளர்கள் எதிர்காலத்தில் சின்னத்தை பார்த்து ஓட்டு போட மாட்டார்கள். இதற்கு முன்னர் கூட சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் மனதை பலர் கவர்ந்துள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் சின்னம் கிடையாது. வேட்பாளர்களுக்கு எண்களே கொடுக்கப்படும். அங்கு வீடு வீடாக சென்று பிரசாரமும் செய்ய முடியாது. வேட்பாளர்களின் பேச்சை கேட்டே வாக்களிக்கும் நிலை உள்ளது. அதுபோன்ற ஒரு மாற்றம் இங்கும் வரவேண்டும்.


    ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்கிற அறிவிப்பு தேர்தல் களத்தில் முன் வைக்கப்படுகிறது.

    அதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் பணம்பட்டுவாடா செய்பவர்களை விட்டு விட்டு பொது மக்களைத்தான் சிரமப்படுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் 100 பேரை பிடித்து சிறையில் அடைத்தால் தானாகவே ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறைந்து விடும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×