search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு
    X

    மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு

    மதுரை ஆதீன மடத்தின் பூஜைகள் நடத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்து உள்ளார்.
    மதுரை:

    மதுரை ஆதீனத்தின் 292-வது சன்னிதானமாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 293-வது ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார்.

    ஆனால் சில மாதங்களில் அவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நித்யானந்தா மதுரை ஆதீன மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில நாட்களில் இளைய ஆதீனமாக திருநாவுக்கரசு என்பவரை மதுரை ஆதீனம் நியமித்தார்.

    இந்தநிலையில் நித்யானந்தா மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    2500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதரால் கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டேன்.

    மடத்தில் ஆன்மீக பணிகளையும் செய்து வந்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு எனது சொந்தசெலவில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கினேன்.

    இந்த நிலையில் மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சிலர் மடத்துக்கு எதிராக பிரச்சனைகளை ஏற்படுத்தினர்.

    இதை தொடர்ந்து ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது இளைய ஆதீனமாக என்னை நியமனம் செய்ததை அருணகிரிநாதர் ரத்து செய்து விட்டதாக அறிவித்தார்.

    ஆதீன பட்டத்தில் இருந்து என்னை நீக்குவதற்கு அருணகிரிநாதருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    திருநாவுக்கரசு என்பவரை அடுத்த ஆதீனமாக நியமனம் செய்தது செல்லாது. மதுரை ஆதீன மடத்திற்குள் சென்று என் கடமைகளை செய்வதற்கு சிலர் இடையூறு செய்து வருகிறார்கள்.

    சட்ட விரோத கும்பல் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது. 293-வது ஆதீனம் என்ற முறையில் மடத்துக்கு சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய பாதுகாப்பு வழங்க மதுரை விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் நித்யானந்தா கூறியுள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×