என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
    • ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார். இதனால் கோப்பையை இந்தியாவிடம் கொடுக்க மோசின் நக்வி மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்குமாறு பிசிசிஐ சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தான் இருக்கும் வரை கோப்பையை வழங்கும் உரிமையை வேறு யாருக்கும் தர மாட்டேன் எனக் கூறி மோசின் நக்வி கூறினார்.

    இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோப்பையை தாம் தான் வழங்குவேன் என்றும் மோசின் நக்வி அதில் மீண்டும் கூறியிருக்கிறார்.

    • ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 359 ரன்கள் எடுத்தது
    • ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்னில் சுருண்டது.

    ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரன்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாவே அணி, 359 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் கரன் சதம் விளாசினார். அவர் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியாவுர் ரஹ்மான் ஷெரிஃபி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 359 ரன்கள் குவித்ததன் மூலம் ஜிம்பாப்வே அணி 232 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ஜத்ரன் 42 ரன்களும் பகீர் ஷா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் 20 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி, இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
    • அக்டோபர் 14-ந் தேதியில் இருந்து பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் பாண்ட்யா மறுவாழ்வு பெற்று வருகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    இதனையடுத்து இந்தியா- தென் ஆப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் காயம் காரணமாக இடம் பெறாத அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் அக்டோபர் 14 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வருகிறார். பெங்களூருவில் உள்ள CoE-யில் நான்கு வாரங்கள் தங்கி இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடருக்காக உடற்தகுதியை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது
    • தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 14 ரன்னிலும் மார்க்ரம் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- டோனி டி சோர்ஸி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    டோனி டி சோர்ஸி 55 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரேவிஸ் 0, கைல் வெர்ரெய்ன் 10 ரன்னிலும் வெளியேறினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டப்ஸ் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து ஹர்மர் 2, யான்சன் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    இந்நிலையில் இந்திய வம்சாளி வீரர்களான முத்துசாமி மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார்.

    30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மகாராஜ் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு முத்துசாமியுடன் ரபாடா ஜோடி சேர்ந்தார். ரபாடா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது. அதிரடியாக விளையாடிய ரபாடா டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. ரபாடா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முத்துசாமி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஆஷிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, சுப்மன் கில்- ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
    • இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் ஐசிசி ஆஸ்கார்கள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. மிக முக்கியமான விருதுகளான இந்த விழா இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்ற சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராஃபி (Sir Garfield Sobers Trophy) என்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, இந்தியாவின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் பேட்டர் ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    இந்த விருது, ஒரு ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படுகிறது.

    இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர். அதில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி (இருமுறை), பும்ரா ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். சுப்மன் கில் வென்றால், 6-வது இந்திய வீரராவார்.

    இந்திய அணியின் தலைவராக, 2025-ல் அனைத்து வடிவங்களிலும் அசாதாரணமான பேட்டிங் செயல்திறனை காட்டியுள்ளார். குறிப்பாக ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் அடித்து, அணியை வழிநடத்தியது அவரது பலம். அவர் இந்த விருதுக்கு இந்தியர்களில் முதல் தேர்வாக உள்ளார்.

    இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேனாக ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் (குறிப்பாக ஆஷஸ் தொடர்) சதங்களைத் தொடர்ந்து அடித்து, அணியின் முதுகெலும்பாக இருந்தார். அவரது நிலையான செயல்திறன் அவரை இரண்டாவது முன்னிலை வீரராக்குகிறது. ஆஷஸ் தொடரில் மேலும் ரன்கள் சேர்த்தால், அவரது வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, சுப்மன் கில் இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரது அணி தலைமைப் பொறுப்பும், பல்வேறு வடிவங்களில் சமநிலை காட்டியதும் காரணம். ஜோ ரூட், டெஸ்ட் அளவில் சிறப்பாக இருந்தாலும், ஒருநாள், டி20-யில் குறைந்த பங்களிப்பு அவருக்கு சவாலாக இருக்கும்.

    விருது வழங்கல் விழா, 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • AUSvIND 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
    • ஓவல் மைதானத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 4 முறை மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில், ஓவல் மைதானத்தில் மழை பெய்து வருவதால் மைதானத்தின் ஈரப்பதத்தை அகற்ற புற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மைதானத்தின் ஈரப்பதத்தை போக்கி விரைவாக உலர வைக்கலாம்.

    ஆஸ்திரேலியா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மைதானத்தை உலரவைக்கும் நிலையில், பணக்கார கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் கொண்டு மைதானத்தை உலரவைக்கிறது என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.

    அப்போதே பிசிசிஐ இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.

    ரூ.7000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் கவுன்சில் மைதானத்தை உலரவைக்க ற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தும் நிலையில், ரூ.20,000 கோடி சொத்துமதிப்பு கொண்ட பிசிசிஐ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது ஏன்? என்றும் பிசிசிஐ-ன் வருமானம் என்று எல்லாம் எங்கு தான் செல்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.
    • கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் அடிலெய்டுவில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடிலெய்டு ஓவல் 42,500 பார்வையாளர்கள் அமரும் வகையில் உள்ளது. பேட்டிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில் 8 போட்டிகளில் 6 முறை சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

    சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் மற்றும் கான்பெராவில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகளும் இதுவரை 153 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.
    • இதில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 85-ல் வெற்றி பெற்றுள்ளன.

    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் அடிலெய்டுவில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அடிலெய்டுவில் இந்தியா ஒருநாள் போட்டி ரெக்கார்டு சிறப்பாகவே உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததே இல்லை. அந்த வரலாற்றை இந்தியா தக்க வைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டி முழுமையாக நடைபெறாமல் பலமுறை மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த இயலாமல் போனது. இதை ஈடு செய்யும் வகையில் வீரர்கள் நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும்.

    20 ஓவர் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வரும் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் முதல் ஆட்டத்தில் சொதப்பினர். ரோகித் 8 ரன்னிலும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். இருவருக்கும் 2-வது போட்டியில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல், அக்ஷர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மட்டுமே பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது. குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய 153 ஒருநாள் போட்டியில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 85-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • கோலி, ரோகித் பற்றி நமக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பது தான்.
    • விராட் கோலி எப்போதும் அதிக ஊக்கம் கொண்டவராக இருந்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடியுமா? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறுகையில் 'இந்த விளையாட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று யாரும் சொல்வதை கேட்க எனக்கு பிடிக்காது. இப்போதே நீங்கள் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பையை அடைய முயற்சி செய்யாமல் சில குறுகிய கால இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    விராட் கோலி எப்போதும் அதிக ஊக்கம் கொண்டவராக இருந்து வருகிறார். அவர் அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருந்து நேரத்தை பாழாக்குவதற்கு பதிலாக தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் சில இலக்குகளையும் அதனை அடையக்கூடிய விஷயங்களையும் தனக்கு தானே அமைத்துக் கொண்டு இருப்பார் என்று நம்புகிறேன்.

    கோலி, ரோகித் பற்றி நமக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பது தான். நிச்சயமாக அவர்கள் சிறந்த வீரர்களே. அவர்கள் சிறந்த இந்திய அணியில் உள்ளனர். ஆனால் இப்போது முதல் உலகக் கோப்பை வரை அவர்களால் தங்களது சிறந்த திறனை கண்டிபிடிக்க முடியுமா? என்பதற்கான பதில் குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஆஸ்திரேலிய தொடர் தான்' என்றார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது.

    • தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

    தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.

    2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. கேப்டன் லோரா 82 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். லுஸ் 59 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அந்த அணியின் மரிசனி கெப் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    மீண்டும் மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

    பாகிஸ்தான் வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது.

    • முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 213 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சங்கர் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோதி 3 விக்கெட்டும் அகேல் ஹோசைன், அலிக் அதனேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அலிக் அதனேஸ்- கீசி கார்டி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதனேஸ் அவுட் ஆனார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கீசி கார்டி ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஒரு முனையில் கேப்டன் சாய் ஹோப் பொறுப்புடன் விளையாட எதிர் முனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 133 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹோப் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய ஹோப், அணியை தோல்வியில் இருந்து மீட்டு டிரா செய்தார்.

    இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 23- ந் தேதி நடக்கவுள்ளது.

    ×