என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வழங்க தயார்.. கண்டிஷன் போட்ட மோசின் நக்வி
- சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
- ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார். இதனால் கோப்பையை இந்தியாவிடம் கொடுக்க மோசின் நக்வி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்குமாறு பிசிசிஐ சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தான் இருக்கும் வரை கோப்பையை வழங்கும் உரிமையை வேறு யாருக்கும் தர மாட்டேன் எனக் கூறி மோசின் நக்வி கூறினார்.
இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோப்பையை தாம் தான் வழங்குவேன் என்றும் மோசின் நக்வி அதில் மீண்டும் கூறியிருக்கிறார்.






