என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சூப்பர் ஓவரில் 1 ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி- வைரல் வீடியோ
- முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 213 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சங்கர் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோதி 3 விக்கெட்டும் அகேல் ஹோசைன், அலிக் அதனேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அலிக் அதனேஸ்- கீசி கார்டி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதனேஸ் அவுட் ஆனார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கீசி கார்டி ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஒரு முனையில் கேப்டன் சாய் ஹோப் பொறுப்புடன் விளையாட எதிர் முனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 133 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹோப் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய ஹோப், அணியை தோல்வியில் இருந்து மீட்டு டிரா செய்தார்.
இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 23- ந் தேதி நடக்கவுள்ளது.






