என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    17 ஆண்டுகளாக அடிலெய்டில் தோல்வியே இல்லை.. வரலாற்றை தக்க வைக்குமா இந்தியா? நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதல்
    X

    17 ஆண்டுகளாக அடிலெய்டில் தோல்வியே இல்லை.. வரலாற்றை தக்க வைக்குமா இந்தியா? நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதல்

    • இரு அணிகளும் இதுவரை 153 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது.
    • இதில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 85-ல் வெற்றி பெற்றுள்ளன.

    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதன் மூலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் ஆட்டம் அடிலெய்டுவில் நாளை (23-ந் தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.

    சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அடிலெய்டுவில் இந்தியா ஒருநாள் போட்டி ரெக்கார்டு சிறப்பாகவே உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததே இல்லை. அந்த வரலாற்றை இந்தியா தக்க வைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் போட்டி முழுமையாக நடைபெறாமல் பலமுறை மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த இயலாமல் போனது. இதை ஈடு செய்யும் வகையில் வீரர்கள் நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும்.

    20 ஓவர் மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வரும் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் முதல் ஆட்டத்தில் சொதப்பினர். ரோகித் 8 ரன்னிலும், கோலி ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். இருவருக்கும் 2-வது போட்டியில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல், அக்ஷர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மட்டுமே பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது. குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய 153 ஒருநாள் போட்டியில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 85-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×