search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்
    X
    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்

    கேஎல் ராகுலின் ஆட்டம் கவலை அளிக்கிறது: டெஸ்டில் தொடக்க வீரர் வரிசையில் மாற்றம்- தேர்வுக்குழு

    கேஎல் ராகுலின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதால், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் வரிசையில் மாற்றம் செய்யப்படும் என தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ரோகித்  சர்மாவும், தவானும் தொடக்க வீரர் வரிசையில் அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

    ஆனால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வரிசை மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

    தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தொடக்க வீரர் வரிசை நிலையாக இல்லை. கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால், பிரித்வி ஷா, முரளி விஜய், ஹனுமான் விஹாரி ஆகியோர் கடந்த ஒரு ஆண்டில் தொடக்க வீரராக மாறிமாறி ஆடி வருகிறார்கள். ஆனாலும் நிலையான நிலை ஏற்படவில்லை.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இந்த தொடரில் விஹாரி, ரகானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சாளர்களாகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

    தொடக்க வீரராக ஆடிய லோகேஷ் ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. அவர் 4 இன்னிங்சில் மொத்தம் 101 ரன்களே எடுத்தார்.

    ராகுலின் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்தனர். மிடில் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரகானேயும், விஹாரியும் சிறப்பாக செயல்பட்டதால் ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து ரோகித் சர்மாவை டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் வரிசையில் மாற்றம் செய்யப்படும் என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுலின் ஆட்டம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஆனாலும் அவர் ஒரு நல்ல ஆட்டக்காரர். அவர் அதிக நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்தால் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி விடுவார். டெஸ்ட் ஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறக்க ரோகித் சர்மாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

    ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல்

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு தேர்வுகுழு கூட்டம் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே அடுத்து நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி தேர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கங்குலி, காம்பீர் ஆகியோர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார்கள்.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. இதன் டெஸ்ட் தொடர் அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×