search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- டூட்டி பேட்ரியாட்ஸ் நாளை மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் நாளை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
    4-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 35 ரன்னில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. கோவை அணி பெற்ற 4-வது வெற்றியாகும். அந்த அணிக்கு அனைத்து ஆட்டங்களும் முடிந்துவிட்டது. 8 புள்ளியுடன் இருக்கிறது.

    மற்ற ஆட்டங்களின் முடிவை பொறுத்து கோவை அணியின் பிளே-ஆப்ஸ் வாய்ப்பு இருக்கிறது. திண்டுக்கல் அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 12 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.

    இன்று நடைபெறும் 26-வது ஆட்டத்தில் ஷிஜித் சந்திரன் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் - அணிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. ‘பிளே- ஆப்ஸ்’ சுற்றை உறுதி செய்ய அந்த அணி காரைக்குடியை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது. மோசமாக தோற்காத வகையிலும் அந்த அணி ஆட வேண்டிய நிலை இருக்கிறது. காரைக்குடி காளை அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.

    முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 வெற்றி 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. மதுரையை விட ரன் ரேட்டில் முன்னிலையில் இருப்பதால் 2-வது இடத்தில் உள்ளது.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி வாரியர்ஸ் (41 ரன்), காரைக்குடி காளை (54 ரன்), கோவை கிங்ஸ் (9 விக்கெட்) காஞ்சி வீரன்ஸ் (61 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. திண்டுக்கல் டிராகன்ஸ் (10 ரன்), மதுரை பாந்தர்ஸ் (33 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது கடைசி (லீக்) ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்சை நாளை (9-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 10 புள்ளியுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். ரன் ரேட்டும் நன்றாக இருப்பதால் அந்த அணியின் முன்னேற்றத்தில் சிக்கல் இருக்காது. அதே நேரத்தில் மிகவும் மோசமாக விளையாடி விடக்கூடாது.

    முன்னாள் சாம்பியனான டூட்டி பேட்ரியாட்ஸ் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை. அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மட்டும்தான் இதுவரை ‘பிளே- ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 3 அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டன.

    பிளே-ஆப்ஸ் சுற்றில் நுழைய எஞ்சிய 3 இடத்துக்கான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 4 அணிகள் உள்ளன. இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
    Next Story
    ×