search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி இல்லாதது ஊக்கத்தை அளித்தது- வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து
    X

    டோனி இல்லாதது ஊக்கத்தை அளித்தது- வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது என்று வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் சரண்டர் ஆனது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 48 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), லீவிஸ் 32 ரன்னும் எடுத்தனர். சான்ட்னெர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    156 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டு 46 ரன்னில் தோற்றது.

    முரளி விஜய் அதிகபட்சமாக 35 ரன்னும், சான்ட்னெர் 22 ரன்னும் எடுத்தனர். மலிங்கா 4 விக்கெட்டும், பும்ரா, குணால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, அங்குல் ராய் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் வீழ்ந்தது. ஏற்கனவே வான்கடே மைதானத்தில் 37 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஓட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. கேப்டன் டோனி ஆடாதது அணிக்கு பாதிப்பு என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி உள்ளது.

    தோல்வி குறித்து சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ்ரெய்னா கூறியதாவது:-


    நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. 156 ரன் எடுக்க கூடிய இலக்குதான். பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 ஓவர்களுக்கு இடையே விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். இதனால் தோல்விக்கு பேட்ஸ் மேன்களே பொறுப்பு.

    ஆனால் எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. எங்கள் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களும் அனுபவம் வாய்ந்தவர்களும் இருந்தும் சாதிக்க இயலவில்லை. அனைத்துமே தவறாக அமைந்தது. பேட்டிங் மீண்டும் பலம் பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அந்த அணி இந்த சீசனில் 3 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்சை 2 முறையும் வீழ்த்தியது. ‘பிளே ஆப்’ சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    டாஸ் தோற்றும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் முதல் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா? என்பதை அறிந்து இருந்தோம். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது. எந்த ஒரு அணிக்கும் எதிராகவும் அவர் இல்லாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமானதே. சேசிங்கில் அவரை கட்டுப்படுத்துவது சவாலானதே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை மே 1-ந்தேதி சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் 12-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை எதிர் கொள்கிறது. #rohitsharma #dhoni #ipl2019

    Next Story
    ×