search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா- மெல்போர்ன் போட்டியில் ஆஸி. தடுமாற்றம்
    X

    முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா- மெல்போர்ன் போட்டியில் ஆஸி. தடுமாற்றம்

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடியது. எஞ்சிய 6 ஓவர்களை ஆரோன் பிஞ்ச் (3 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (5 ரன்) ஜோடி சமாளித்துக் கொண்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவர்கள் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.



    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

    உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை காப்பாற்ற நிதானமாக ஆடி வருகிறது. தற்போதைய நிலையில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டிம் பெயின், கம்மின்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். #AUSvIND #TeamIndia 
    Next Story
    ×