search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
    X

    2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvNZ #NZvENG

    வெல்லிங்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 30 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர்  49.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 223 ரன்கள் சேர்த்தது. 



    அதிகபட்சமாக சான்ட்னர் 63 ரன்கள் (நாட் அவுட்) ரன்கள் எடுத்தார். துவக்க வீரர் குப்தில் 50 ரன்களும், கிராண்ட்ஹோம் 38 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், அலி, ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

    குறிப்பாக பீல்டிங்கில் இங்கிலாந்து வீரர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டனர். 4 வீரர்களை ரன் அவுட் செய்தனர். ஜேசன் ராய் அபாரமான 2 கேட்சுகள் பிடித்தது திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 224 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். ராய் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 9 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் பேர்ஸ்டோவுடன், இயான் மார்கன் ஜோடி சேர்ந்தார். 


    ஆட்டநாயகன் விருது வென்ற பென் ஸ்டோக்ஸ்

    இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோ 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கன் உடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்து சிறப்பாக விளையாடினார். இருவரும் அரைசதம் கடந்தனர். மார்கன் 62 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லர் களமிறங்கினார். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    இங்கிலாந்து அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 63 ரன்களுடனும், பட்லர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி பந்துவீச்சில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணியினரும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளனர். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 3-ம் தேதி நடைபெற உள்ளது. #ENGvNZ #NZvENG
    Next Story
    ×