search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை தாக்குதல் கொடூரமானது- பிரதமர் மோடி
    X

    மும்பை தாக்குதல் கொடூரமானது- பிரதமர் மோடி

    • நவம்பர் 26-ந்தேதியை நாம் ஒருபோதும் மறக்க இயலாது.
    • அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    107-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:-

    நவம்பர் 26-ந்தேதியை நாம் ஒருபோதும் மறக்க இயலாது. இந்த நாளில் தான் நாட்டில் மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது.

    பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய இந்த தாக்குதல் நாடு முழுவதையும் உலுக்கி விட்டது. இதில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்த அந்த துணிச்சலான இதயங்களை நாடு இன்று நினைவு கூர்கிறது.

    மும்பை தாக்குதலில் இருந்து மீண்டு தற்போது முழு துணிச்சலுடன் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டோம். இது இந்தியாவின் திறமை தான்.

    இன்னொரு காரணத்திற்காக இந்த நாள் முக்கியமானது. 1949-ல் அரசியலமைப்பு சபை இந்த நாளில் இந்திய அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டது. 2015-ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை கொண்டாடும் போது நவம்பர் 26-ந் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமீபத்தில் பண்டிகைகளின்போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் இடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.

    கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு நீங்கள் டிஜிட்டல் மூலமாக மட்டுமே பணம் செலுத்துங்கள். ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் அனுபவங்களையும், புகைப்படங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    தீபாவளி பண்டிகையின்போது பெரிதளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

    21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நீர் பாதுகாப்பாகும். நாம் அனைவரும் சேர்ந்து மக்களின் கடமைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்கான உறுதியை நிச்சயம் நிறை வேற்றுவோம்.

    'தூய்மை இந்தியா' இப்போது முழு நாட்டிற்கும் பிடித்த தலைப்பாக மாறி உள்ளது. இது பொது சுகாதாரம் தொடர்பான மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது. இந்த முயற்சி தேசிய உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. இது கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது.

    இந்த பிரசாரம் பல்வேறு தரப்பு மக்களை குறிப்பாக இளைஞர்களை கூட்டு பங்களிப்புக்கு ஊக்கப்படுத்தி உள்ளது. குஜராத்தின் சூரத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து 'புராஜெக்ட் சூரத்'-யை தொடங்கியுள்ளனர். அவர்கள் பொது இடங்களையும், டுமாஸ் கடற்கரையையும் சுத்தம் செய்து வருகிறார்கள்.

    இந்த இளைஞர்கள் குழு பல லட்சம் கிலோ குப்பைகளை அகற்றியுள்ளனர். அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். தூய்மை என்பது ஒருநாள் அல்லது ஒரு வாரத்திற்கான பிரசாரம் அல்ல. அது வாழ் நாள் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு முயற்சியாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானில் இருந்து 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் பலியானார்கள்.

    Next Story
    ×