search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

    • போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது.
    • விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நர்சு வேடத்தில் வந்த பெண், சினேகாவிற்கு ஊசி போட முயன்றார். ஆனால் அவர் வைத்திருந்த சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதுகுறித்து சினேகாவின் தாயார் கேட்டபோது அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர், அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் அனுஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது. அவரை காதலித்ததாகவும் திருமணம் கை கூடாததால் சினேகாவை கொலை செய்ய முயன்றதாகவும் அனுஷா போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான அனுஷா, ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். முதல் கணவரை பிரிந்து விட்டார். 2-வதாக திருமணம் செய்தவர் வெளிநாட்டில் உள்ளார். இருப்பினும் அருண் மீதான காதலை அவர் கைவிடாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அருணிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் அனுஷாவிடம் சாதாரண முறையில் நட்பாக இருந்ததாக மட்டும் கூறினார்.

    இந்த விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அழிக்கப்பட்ட செய்திகளை மீட்க தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி அஜீப் தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர் பினாகுமாரி பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×