search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புத்தாண்டு கேரளாவின் வளர்ச்சி ஆண்டாக இருக்கும்: பிரதமர் மோடி
    X

    புத்தாண்டு கேரளாவின் வளர்ச்சி ஆண்டாக இருக்கும்: பிரதமர் மோடி

    • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு மீண்டும் வந்திருக்கிறார்.
    • பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது. அதேபோன்று தற்போதைய தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கடசி செயல்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி கேரளாவில் கால் பதிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் பாரதிய ஜனதா சார்பில் பிரபலங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி பத்தினம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் 19-ந்தேதி பாலக்காட்டில் நடந்த ரோடு-ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் திருச்சூர் தொகுதி வேட்பாளரான நடிகர் சுரேஷ்கோபி, ஆலத்தூர் தொகுதி வேட்பாளரான சரசு, திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளரான மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், அட்டிக்கல் தொகுதி வேட்பாளரான மத்திய மந்திரி முரளீதரன் ஆகியோரை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மைசூருவில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தார். பின்பு அங்கிருந்து எர்ணாகுளம் சென்று, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

    பிரதமர் மோடி இன்று காலை எர்ணாகுளத்தில் இருந்து திருச்சூர் மாவட்டம் ஆலத்தூர் தொகுதியில் உள்ள குன்னமங்களத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் சுரேஷ்கோபி, சரசு ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் பார்த்து, கேரளாவில் இந்த புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தை கொண்டு வந்துள்ளது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். இந்த புத்தாண்டு கேரளாவின் வளர்ச்சி ஆண்டாக இருக்கும். இந்த புதிய ஆண்டு புதிய அரசியலின் தொடக்க ஆண்டாக இருக்கும். அதனால்தான் இன்று கேரளாவும் மீண்டும் மோடி அரசு என்று கூறுகிறது என்றார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் பயணிக்கும் சாலைகள், அவர் பங்கேற்ற கூட்டங்கள் நடந்த பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 2 முறை, பிப்ரவரியில் ஒரு முறை, மார்ச் மாதம் 2 முறை என 5 முறை வந்திருந்த நிலையில், தற்போது 6-வது முறையாக கேரளாவுக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×