

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை வாலிபர் ஒருவர் ஏ.சி.யாக பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எக்ஸ் தளத்தில் எமினென்ட் வோக் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வீட்டில் உள்ள ஃபிரிட்ஜை ஒருவர் திறந்து வைத்திருக்கிறார். அதற்கு முன்பு ஏர் கூலரையும் வைத்துள்ள நபர், அவற்றின் முன்புறம் கட்டிலில் நிம்மதியாக படுத்து உறங்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த முறையில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். குளிர்ச்சி இருக்காது என சிலர் பதிவிட்டுள்ளனர். இயற்பியல் விதிப்படி இந்த முறை வெப்பத்தை தான் அறையில் உருவாக்கும் என சிலரும், இப்படி ஃபிரிட்ஜை திறந்து வைத்தால் அது விரைவிலேயே பழுதாகிவிடும் என சிலரும் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் உங்களிடம் இருப்பதை வைத்து சிறப்பான பொருளை உருவாக்குங்கள் என பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சில பயனர்கள், அவரது புதுமையான செயலை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.