search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உள்கட்சி பிரச்சனைகளை வெளியே பேசக்கூடாது: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே அறிவுரை
    X

    உள்கட்சி பிரச்சனைகளை வெளியே பேசக்கூடாது: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே அறிவுரை

    • பா.ஜனதாவின் பொய்கள், வஞ்சகம், தவறான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மக்கள் முன்னிலையில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.
    • காங்கிரசார் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    டெல்லியில், நாடு முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தனது அரசின் 10 ஆண்டுகால தோல்விகளை மூடி மறைப்பதற்காக உணர்வுபூர்வமான பிரச்சனைகளை எழுப்பி வருகிறது. ஒவ்வொரு பிரச்சனையிலும் திட்டமிட்டு காங்கிரசை சம்பந்தப்படுத்துகிறது.

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பா.ஜனதாவின் பொய்கள், வஞ்சகம், தவறான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு மக்கள் முன்னிலையில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.

    பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்திக்கு பாராட்டுகள். அவர் புதிதாக மேற்கொள்ளும் 'பாரத நீதி பயணம்' சமூக நீதி பிரச்சனையை தேசிய விவாத பொருளாக மாற்றும்.

    காங்கிரசார் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தள்ள வேண்டும். உள்கட்சி பிரச்சனைகளை வெளியே பேச வேண்டாம். ஊடகங்களில் தெரிவிக்கக்கூடாது.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றியை உறுதிசெய்ய ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். வெற்றிக்காக ஒரே குழுவாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே, மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 19 மாதங்களில் 31 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.

    பெட்ரோல், டீசல் விலை குறைப்பது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மோடி அரசின் மந்திரிகள் கூறுகிறார்கள்.

    பெட்ரோல், டீசல் விற்பனையில் மோடி அரசின் கொள்ளைக்கு கட்டுப்பாடே இல்லை. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.8 முதல் ரூ.10 வரையும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×