search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்கள் அணைக்கட்டுகளை பார்வையிட வாருங்கள்: காவிரி ஆணையத்துக்கு கர்நாடகா அழைப்பு
    X

    எங்கள் அணைக்கட்டுகளை பார்வையிட வாருங்கள்: காவிரி ஆணையத்துக்கு கர்நாடகா அழைப்பு

    • காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கர்நாடகாவுக்கு மிகப் பெரிய வலியான விசயம்.
    • நாங்கள் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என நாங்கள் எண்ணவில்லை.

    புதுடெல்லி:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீர் தங்கள் மாநிலத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு மட்டுமே உள்ளது என்றும், எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றும் அந்த மாநில அரசு கூறி வருகிறது.

    தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா காவிரியில் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24 ஆயிரம் கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கர்நாடகாவுக்கு மிகப் பெரிய வலியான விசயம். ஏனெனில், எங்கள் மாநிலத்தில் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. இது குறித்து கர்நாடகா தரப்பில் ஆஜராக உள்ள வழக்கறிஞர் சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிப்பார். கர்நாடக விவசாயிகளின் உணர்வுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மதிப்பளிக்கும் என்று நம்புகிறேன்.

    நாங்கள் தமிழக விவசாயிகளை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது என நாங்கள் எண்ணவில்லை. தண்ணீர் இருந்திருந்தால், நாங்கள் வழங்குவோம். கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. தற்போது வறட்சி நிலவுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவுக்காக அல்ல, தமிழகத்துக்கு உதவுவதற்காகத்தான்.

    மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கு, நீர்த்தேக்கங்களைப் பார்வையிடுமாறு அதிகாரிகளை நாங்கள் அழைத்துள்ளோம். ஆணையம் எங்கள் கோரிக்கையை மதித்து, மாநிலம் மற்றும் அதன் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    எங்கள் மாநில விவசாயிகளின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து எங்களது சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட முடிவை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×