search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் வெப்ப அலை- தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை
    X

    நாடு முழுவதும் வெப்ப அலை- தேர்தல் ஆணையம் 'திடீர்' ஆலோசனை

    • வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது.
    • ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடுமையான வெப்பம் தாக்குகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கேரளாவில் வருகிற 26- ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் மாநிலத்தில் வெப்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும், மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக வெயில் அடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நாடுமுழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில், அடுத்த 2-3 நாட்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 1-2 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. அடுத்த 4-5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.

    வெயில் அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஒடிசாவில் ஆரஞ்சு எச்சரிக்கை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும்.

    பீகாரில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெப்ப அலைக்கான சாத்தியம் உள்ளது.

    இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் அவசரமாக கூடி ஆலோசித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கடுமையான வெப்பம் தாக்கும் என்பதால் வாக்குப்பதிவு, பிரசாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×