என் மலர்tooltip icon

    இந்தியா

    • 5 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
    • எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் கடந்த நவம்பர் 16 அன்று இடிந்து பாறைகள் விழுந்ததில் 15 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்புப்பணிகள் கைவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

    எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
    • ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.

    மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

    குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    • ஒருவரையொருவர் தாண்டி செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பதினெட்டாம் படி அருகே தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்கதர்கள் செல்வதால் அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது.

    பதினெட்டாம் படிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பக்தர்களை பாதுகாப்பாக படிகளில் ஏற்றி விடுகிறார்கள். கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான பக்தர்கள் சிறுவர்களுடன் வந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

    இவர் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செலவில் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் இருந்து 33 பக்தர்களுடன் வந்த பேருந்து கோட்டயம் மாவட்டம் எருமேலியில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.

    • நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் முற்றிலும் அது தோல்வியடைந்தது.
    • நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.

    பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக சில பங்கைக் கொண்டிருந்தோம். பொதுமக்கள் எங்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எங்கள்மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால் அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. நாங்கள் மீண்டும் அதே சக்தியுடன் நிற்போம்.

    நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு. ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்தை வென்றால் என்ற எனது கருத்து பற்றி மக்கள் நிறைய பேசுகிறார்கள் - நான் இன்னும் அதை ஆதரிக்கிறேன். நிதிஷ்குமார் 1.5 கோடி பெண்களுக்கு தான் உறுதியளித்த ரூ.2 லட்சத்தை மாற்றி, வாக்குகளை வாங்கி வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால் நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரிவித்தார்.

    • நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
    • இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

    யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.

    இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.

    • தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனை நடத்தியது.

    புதுடெல்லி:

    தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

    சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன் விரிவான உத்தி மதிப்பாய்வை நடத்தினோம்.

    வாக்காளர் பட்டியல்களின் நேர்மையைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக உள்ளது.

    ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், SIR செயல்முறையின் போது தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.


    அது பா.ஜ.க.வின் நிழலில் செயல்படவில்லை என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.

    அது எந்த ஆளும் கட்சிக்கும் அல்ல, இந்திய மக்களுக்கு அதன் அரசியலமைப்பு உறுதிமொழி மற்றும் விசுவாசத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

    பாஜக SIR செயல்முறையை வாக்கு திருட்டுக்காக ஆயுதமாக்க முயற்சிக்கிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    தேர்தல் ஆணையம் வேறு வழியைப் பார்க்கத் தேர்வு செய்தால், அந்தத் தோல்வி வெறும் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல - அது மௌனத்தின் உடந்தையாக மாறும்.

    உண்மையான வாக்காளர்களை நீக்கவோ அல்லது போலி வாக்காளர்களைச் சேர்க்கவோ எவ்வளவு நுட்பமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அதை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்தார்.

    • பீகாரில் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
    • போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

    பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.

    அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "நாங்கள் மேற்கொண்ட நேர்மையான முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்களால் இந்த சிஸ்டமை மாற்றமுடியவில்லை என்பதை விட அதிகாரத்தில் கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    ஆனால் பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதில் இருந்தே நாங்கள் எங்கோ வறு இருந்திருக்கிறோம் என்பது புரிகிறது.

    மக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது தான். பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100% பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
    • இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும்.

    அமெரிக்காவில் இருந்து வருடத்திற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். தற்போது, இந்தியா தனது LPG தேவைகளில் 50% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 68,000 பாதுகாப்பு ஊழியர்களுடன் கூடுதலாக 1,76,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
    • சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த கட்டாயமும் இல்லை.

    கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் (ECI) தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், உள்ளாட்சி தேர்தல்களுடன் SIR-ஐ நடத்துவது நிர்வாக சவால்களை ஏற்படுத்தும் என்றும், உள்ளாட்சி தேர்தல்கள் சுமூகமாக நடத்துவதற்கு தடையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,

    கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 தொகுதி பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகள் என மொத்தம் 1,200 உள்ளூர் பொது அமைப்புக்கள் உள்ளன. இவை மொத்தமாக 23,612 வார்டுகளை உள்ளடக்கியது. டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    நவம்பர் 4-ந்தேதி SIR தொடங்கியது. டிசம்பர் 4-ந்தேதி வாக்காளர் வரைவு பட்டியல்கள் வெளியிட திட்டமிடப்பட்டது. முழு திருத்தத்தையும் செயல்படுத்த ஒரு மாதம் மட்டுமே மீதமுள்ளது. இந்த காலக்கெடு உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பாதிக்கப்படும்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 68,000 பாதுகாப்பு ஊழியர்களுடன் கூடுதலாக 1,76,000 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். SIR-க்கே கூடுதலாக 25,668 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இது நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் வழக்கமான வேலைகள் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    அரசியலமைப்பின் பிரிவுகள் 243-E மற்றும் 243-U, கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் பிரிவு 38 மற்றும் கேரள நகராட்சி சட்டத்தின் பிரிவு 94 ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகும் உறுப்பினர்கள் டிசம்பர் 21-க்கு முன் பதவியேற்க வேண்டும்.

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த கட்டாயமும் இல்லை என்றும், உடனடி SIR தேவைப்படுவதற்கு எந்த சிறப்பு காரணங்களையும் தேர்தல் ஆணையம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளது.

    கேரள உயர்நீதிமன்றம் முன்னதாக SIR-க்கு தடை விதிக்க மறுத்து, தொடர்புடைய மனுக்களை ஏற்கனவே விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அரசுக்கு அறிவுறுத்தியது.

    நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு SIR வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், அடுத்ததாக நவம்பர் 26-ந்தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    • 25 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெறுகிறது.
    • சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து தலைநகரம் முழுவதும் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாக்குதல் தொடர்பாக சிக்கிய மருத்துவர்கள் வேலை பார்த்த அரியானா அல்ஃபாலா பல்கலை தலைமை அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெறுகிறது.

    டெல்லி தாக்குதல் தொடர்பாக நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    • வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.
    • பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.

    வட இந்தியாவின் புகழ்பெற்ற உணவான பட்டர் சிக்கன், டேஸ்ட்அட்லஸ் நிறுவனம் வெளியிட்ட தரவரிசையில் 5-வது இடத்தை பெற்றுள்ளது.

    'உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்' என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் உள்ள மற்றொரு இந்திய உணவு தந்தூரி சிக்கன். இது 14-வது இடத்தில் உள்ளது.

    வெண்ணெய் கலந்த, கிரீமி கிரேவியில் போடப்படும் தந்தூரி கோழியின் துண்டுகள் தான் பட்டர் சிக்கனில் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன.

    ஒரு நாள் தந்தூரி சிக்கனை வீணாக்குவதைத் தவிர்க்கும் முயற்சியில் இந்த உணவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக தற்போது மாறி உள்ளது.

    பிரிவினைக்கு முந்தைய காலத்தில் பெஷாவரில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பொதுவான கதை. உணவகத்தில் பணிபுரிந்த குந்தன் லால் குஜ்ரால் மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோர் 1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, தாக்கூர் தாஸ் மாகோ என்ற தொழிலதிபருடன் சேர்ந்து மோதி மஹாலைத் திறந்தனர். இரண்டு குடும்பங்களும் பட்டர் சிக்கனை உருவாக்கியதாக உரிமை கோருகின்றன.

    பூண்டு அல்லது வெண்ணெய் என எதுவாக இருந்தாலும், பட்டர் சிக்கனை நானுடன் சேர்த்து சாப்பிடவே பெரும்பாலோர் விரும்புகிறோம்.

    டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

    இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான். 



    ×