என் மலர்
இந்தியா
- ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
- ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர்.
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சபரிமலை தேவசம்போர்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
* கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
* ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
* சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கேரள அரசு வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
- நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.
கேரள அரசு இந்திய தேர்தல் ஆணையத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
SIR நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாக்கல் அவசரமாக பட்டியலிடக்கோரி தாக்கல் செய்த மனுவை இந்திய தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன் எடுத்துரைத்தார்.
அப்போது, கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வருவதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் ஆணையத்தை நடத்துவது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி கவாய் ஒப்புக்கொண்டார்.
உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR-ஐ ஒத்திவைக்க கேரள அரசும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
- அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்களின் தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.
நாளை மறுதினம் நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இலாகா பிரிப்பதில் பாஜக- நிதிஷ் குமார் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். பின்னர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரி, தனக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.-க்களின் கடிதத்தை வழங்குவார்.
நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றும் விழாவில பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பதவி ஏற்பு விழா நடைபெறும் காந்தி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
- இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய காலக்கட்டத்தில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் மட்டுமே அதிக செலவாகிறது. இதிலும் பிள்ளைகளின் கல்விக்காக மழலையர் வகுப்பு தொடங்கி பட்டயப்படிப்பு வரை பெற்றோர் செய்யும் செலவு சொல்லி மாளாது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, வளர்ந்து, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ, மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான கமலேஷ் பாண்டே தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களையும் சொல்லச் சொல்லி நோட்டில் எழுதிக்கொள்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
இதனிடையே, தொடக்கப்பள்ளியில் 42 குழந்தைகள் படித்து வருவதாகவும், அவர்களுக்கு கல்வி கற்க இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் அடிக்கடி பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்பு நேரங்களில் தூங்குவதாகவும், மற்றொருவர் தவறான எழுத்துப்பிழைகளைக் கற்பிப்பதாகவும் கிராமவாசிகள் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
- நேற்று கூட சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை சந்திக்கும்போது இதை கருத்தை தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவியது. இருநாட்டு ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் எனத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ஆனால், டிரம்ப் தலையிடவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், உலகத் தலைவர்களை சந்திக்கும்போதெல்லாம், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்று சவுதி பட்டத்து இளவரசரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் "இந்த கூற்று நிறுத்தப்பட்டுள்ள என நினைத்தால் உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறார். இதற்கு முன்னதாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்பு, பிரிடடன், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் பல்வேறு இடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதை தெரிவித்தார். தற்போது 60-வது முறையாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
சவுதி பட்டத்து இளவரசர் உடனான சந்திப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
நான் உண்மையில் 8 போர்களை நிறுத்தி விட்டேன். மற்றொரு போரை நிறுத்த புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதினை பார்த்து எனக்கு சற்று ஆச்சர்யமாக உள்ளது. நான் நினைத்ததை விட சற்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தினோம். பட்டியலை நான் வெளியிட முடியும். அந்த பட்டியலில் என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
- ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி தரிசன டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தரிசனத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ந் தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட துவார தரிசனத்தின் முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மீதமுள்ள 7 நாட்களுக்கு வைகுண்ட ஏகாதேசி தரிசனத்திற்கான டோக்கன் நேரடியாக வழங்கப்படும் பக்தர்கள் நேரடியாக திருமலையை அடைந்து வைகுண்ட துவார தரிசனம் செய்யலாம்.
இந்த 10 நாட்களில் சுமார் 8 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4,300 முதல் 4,700 பேர் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை முதல் 3 நாட்கள் தரிசனத்திற்கான டோக்கன்களுக்கு பக்தர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேவஸ்தான வலைத்தளம், மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். டிசம்பர் 2-ந்தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்வதற்கு முதல் 3 நாட்களில் ஆன்லைன் டோக்கன் இல்லாத பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வர வேண்டாம் என தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 66,966 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21.535 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடியாக இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
- அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சக்தியின் உருவகமாக, இந்திரா காந்தி ஏராளமான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்ட போதும், தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உலகளாவிய நிலைப்பாட்டை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தீவிர அர்ப்பணிப்பும் காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.
- தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.
பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.
தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
- நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது.
ஹாவேரி:
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தை சேர்ந்தவர் ரூபா(வயது 30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ரூபாவை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பிரசவ அறையில் படுக்கை வசதி பற்றாக்குறையாக இருந்ததால், ரூபா பிரசவ அறையின் வெளியில் நடைபாதையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு கடுமையாக பிரசவ வலி ஏற்பட்ட போதிலும் எந்த டாக்டரும், நர்சும் ரூபாவை பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடுமையான வலியால் துடித்த ரூபா இருக்கையில் அமர முடியாமல் எழுந்து அங்கும் இங்கும் வலியில் துடித்தப்படி நடந்து கொண்டிருந்தார். அவர் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தை பிறந்தது. பின்னர் தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததால் அந்த குழந்தை உடனே இறந்துவிட்டது.
ரூபா கடுமையான பிரசவ வலியில் அலறி துடித்த போதிலும் டாக்டர்கள் அனைவரும் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததும் தான் குழந்தை இறப்புக்கு காரணம் எனவும் ரூபாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
பின்னர் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.
இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
- மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.
அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார்.
- சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.
- மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தொடங்கிய விவாதம் சர்ச்சையாக மாறி ஒரு இளைஞனின் உயிரைப் பறித்ததுள்ளது. குடிபோதையில் இருந்தபோது அந்த இளைஞனை அவரது சொந்த மாமாக்கள் மிதித்து கொன்றனர்.
பீகாரின் சிவ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மஞ்சி (22) அவரின் மாமாக்கள் ராஜேஷ் மஞ்சி, துபானி மஞ்சி ஆகியோர் மத்தியப் பிரதேசத்தின் குணாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். ராஜேஷ் மற்றும் துஃபானி மஞ்சியின் மருமகன் (சகோதரி மகன்) சங்கர் மஞ்சி.
இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் மூவரும் மது அருந்தி பேசிக் கொண்டிருந்தபோது, விவாதம் அரசியலுக்குத் திரும்பியது. சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்ஜேடி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ஜேடியு மகத்தான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து குடிபோதையில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிதிஷ் குமார் ஆதாரவாளர்களான மாமாக்கள் ராஜேஷும் துபானி மஞ்சியும் சேர்ந்து சங்கர் மஞ்சியைத் தாக்கினர். அவர்கள் சங்கரை அருகிலுள்ள சேற்றுக்கு இழுத்துச் சென்று மாறி மாறி மிதித்துள்ளனர்.
சண்டை குறித்து உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சங்கர் மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த போலீசார், சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.






