என் மலர்tooltip icon

    இந்தியா

    • 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
    • ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.

    புதுடெல்லி:

    சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

    மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

    ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.

    இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்.
    • விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலையிலும், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். அவரை கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் வைத்து அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அன்மோல் பிஷ்னோயை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது.

    அன்மோல் பிஷ்னோய் மற்றும் இந்தியாவால் தேடப்படும் 2 குற்றவாளிகள் உள்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 200 இந்தியர்களுடன் விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. இவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.

    அந்த விமானம் இன்று டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்மோல் பிஷ்னோயை விசாரிக்க 15 நாட்கள் காவல் வழங்கும்படி என்ஐஏ கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், அன்மோல் பிஷ்னோவுக்கு 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    • அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர்.
    • ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.

    இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

    கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சபரிமலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரும் 24ம் தேதி வரை, 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    20,000 பேருக்கு ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வழியில்லாததால் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம்.
    • திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கட்சி ஜன் சுராஜ் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட அக்கட்சி 4 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றது.

    தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அந்த முடிவடை தவறாக கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம். திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும். எங்கள் கட்சி 4 சதவீதத்திற்கு கீழ் வாக்குகள் பெறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் பின் வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

    ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 60 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதிஷ் குமார் அரசு வழங்காமல் இருந்திருந்தால், ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது.

    • உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் பழைய வீடியோ வெளியானது
    • இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.

    இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.

    இந்நிலையில், உமர் பேசிய பழைய வீடியோ குறித்து AIMIM கட்சி தலைவர் ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை "தியாகம்" என்று நியாயப்படுத்தும் விதமாக ஒரு பழைய வீடியோ உள்ளது. இஸ்லாத்தில் தற்கொலை செய்து கொள்வது ஹராம், அப்பாவிகளைக் கொல்வது ஒரு பெரிய பாவம். இதுபோன்ற செயல்கள் நாட்டின் சட்டத்திற்கும் எதிரானவை. இது பயங்கரவாதம், வேறு எதுவும் இல்லை.

    ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மகாதேவ் ஆகியவற்றின் போது அமித்ஷா கடந்த ஆறு மாதங்களில் எந்த உள்ளூர் காஷ்மீரியும் பயங்கரவாதக் குழுக்களில் சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இந்தக் குழு எங்கிருந்து வந்தது? இந்தக் குழுவைக் கண்டறியத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று பதிவிட்டுள்ளார். 

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
    • பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன.

    இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    மனசாட்சியுடன் செயல்பட்டு, மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாஜக உடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குதிருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
    • தேர்தல் தோல்வி விரக்கியதால் குற்றச்சாட்டு என முக்கியஸ்தர்கள் கடிதம்.

    காங்கிரஸ் கட்சி மக்களவை, சட்டசபை தேர்தல் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதேவேளையில் பாஜக-வின் வெற்றிக்கு வாக்கு திருட்டுதான் முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவி செய்து வருகிறது என ராகுல் காந்தி தொடர்ந்த குற்றம்சாட்டி வருகிறார்.

    ஆதாரங்களுடன் குற்றம்சாட்டிய நிலையிலும், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக 272 முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில் "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படுகிறார்" கையொப்பமிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

    சுமார் 272 பேர் கையொப்பமிட்டு உள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகள் மூத்த அதிகாரிகள் யாரும் கையொப்பமிடவில்லை.

    16 நீதிபதிகள் 123 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 133 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், ஹேமந்த் குப்தா உள்ளிட்ட வரும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

    • இந்தக் கருத்துக்கள் விசித்திரமானவை அல்லது பழமையானவை என்று எனக்குத் தெரியும்.
    • ஆனால் இந்த கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

    Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் கூறியுள்ளார். இது இணைய தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது.

    இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் "நான் சந்திக்கும் இளைய தொழில்முனைவோர்களிடம், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், தள்ளிப் போடக்கூடாது என அட்வைஸ் வழங்குகிறேன்.

    சமூகத்திற்கும் அவர்களின் சொந்த மூதாதையர்களுக்கும் அவர்கள் தங்கள் மக்கள்தொகை கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமானவை அல்லது பழமையானவை என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

    • ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர்.

    கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சபரிமலை தேவசம்போர்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    * கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    * ஸ்பாட் புக்கிங்கிற்காக நிலக்கல்லில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

    * சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    * ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ×