என் மலர்tooltip icon

    இந்தியா

    • ரஷியாவிடம் இருந்து இந்தியா தினசரி 10 லட்சம் பேரலுக்கு மேல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
    • மார்ச் மாதத்திற்குள் அளவை பெரிய அளவில் இந்தியா குறைக்க இருப்பதாக தெரிகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    ஆனால், இந்தியாவுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதனால் அமெரிக்காவின் வலியுறுத்தலை இந்தியா நிராகரித்தது. இதன் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக வரி விதித்தார். என்றபோதிலும் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வந்தது.

    இதற்கிடையே வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப். ஒரு கட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவானது.

    இதற்கிடையே வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்து, தனது நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. அங்குகள் எண்ணெய் வளங்களை கையாள அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    அத்துடன், ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொண்டால் வெனிசுலாவை கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முடியும் என்று அமெரிக்கா சொல்லிக் கொண்டு வந்தது.

    வெனிசுலா எண்ணெய்க்கும் வரி, ரஷியா எண்ணெய்க்கும் வரி என்பதை தவிர்க்க, இந்தியா படிப்படியாக ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை வருங்காலத்தில் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதனால், வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெனிசுலாவில் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான வரியை அமெரிக்கா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், வெனிசுலா கச்சா எண்ணெய் அந்நாட்டின் PDVSA நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுமா அல்லது Vitol or Trafigura போன்ற வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுமா என்பது குறித்து விபரங்கள் வழங்கப்படவில்லை.

    ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து வருவதால், இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தி வருகிறது என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என நேரடியாக தெரிவிக்கவில்லை.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவை 10 லட்சம் பேரலுக்கு கீழ் கொண்டு வர தயாராகி வருகிறது. ஜனவரில் 1.2 மில்லியன் பேரலாக இருக்கும். இது பிப்ரவரியில் 1 மில்லியனாக இருக்கும். மார்ச் மாதம் 8 லட்சம் பேரலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
    • அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என்றார்.

    • தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
    • முதல் கணவர் வீரேகவுடா சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவர் அனந்தமூர்த்தி. இவர், ஆன்லைன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். அனந்தமூர்த்திக்கும், தொட்டபள்ளாப்புரா அருகே அனபே கிராமத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதாகவும் அனந்தமூர்த்தியிடம் சுதாராணி கூறியிருந்தார்.

    இதையடுத்து, தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அவர்களை சமாதானப்படுத்தி சுதாராணியை ஒரு கோவிலில் வைத்து அனந்தமூர்த்தி திருமணம் செய்திருந்தார். இதற்கிடையில், கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் ஐதராபாத்துக்கு வேலை விஷயமாக செல்வதாக அனந்தமூர்த்தியிடம் கூறிவிட்டு சென்ற சுதாராணி திரும்பி வரவில்லை.

    இதற்கிடையே சுதாராணி பற்றி விசாரித்தபோது அனந்தமூர்த்திக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது அவரது முதல் கணவர் உயிருடன் இருப்பதும், தற்போது ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த சிவகவுடா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதும் அனந்தமூர்த்திக்கு தெரியவந்தது. இதுபற்றி தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

    அதில், முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறி சுதாராணி என்னை 2-வது திருமணம் செய்தார். தற்போது அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.20 லட்சத்துக்கு மேல் வாங்கி மோசடி செய்ததுடன், 3-வதாக சிவகவுடாவை திருமணம் செய்துள்ளார்.

    என்னை போன்று பலரை திருமணம் செய்து, பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்வதுதான் கல்யாண ராணியான சுதாராணியின் வேலை என்று அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த முதல் கணவர் வீரேகவுடாவும் சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனக்கு மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட தெரியவில்லை எனக்கூறி பிரிந்து சென்று விட்டார். என்னிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வீரேகவுடாவும் புகார் அளித்து உள்ளார்.

    இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
    • தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    இதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பதை பொறுத்தமட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது.

    அதேபோன்று மருந்து பொருட்களில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுகாதாரத்தில் நவீனத்துவம் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிகிறது. கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.

    வருமான வரி விதிப்பு வரம்பை பொறுத்தமட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பழைய வரி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, புதிய வரி முறையை நோக்கி அரசாங்கம் செல்லக்கூடும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் விலை குறைந்தது.

    இதனால், பட்ஜெட்டில் இந்த பொருட்கள் மீதான விலைத்தாக்கம் பெரிய அளவில் ஏற்றமாகவோ, இறக்கமாகவோ இருக்காது என கூறப்படுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எழுச்சி பெறும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம்.
    • மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அளவிடப்படுகிறது. இதுதொடர்பாக 3 மாதத்துக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
    • மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் கான்ஃபிடன்ட் குழுமத் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

    வருமான வரி மற்றும் அமலாக்க துறைகளின் தொடர்ச்சியான சோதனைகளுக்கு மத்தியில் இந்த முடிவை அவர் எடுத்தாதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

    ராய் சோதனை அதிகாரிகள் கோரிய ஆவணங்களை தனது அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து எடுக்க சென்றபோது, தனது சொந்த துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

    57 வயதான சி.ஜே. ராய் ரியல் எஸ்டேட் மட்டுமின்றி, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மோகன்லால் நடித்த 'மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்', 'காஸனோவா' போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார். ராய் சிரியாங்கந்தத் ஜோசப்பின் இந்த சோக முடிவு வணிக மற்றும் ரியல் எஸ்டேட் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • வெனிசுலா அதிபராக இருந்து மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்தது.
    • இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

    வெனிசுலா அதிபராக மதுரோ இருந்து வந்தார். வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளது. அவர் அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் இன்று பேசினார்.

    அனைத்து பகுதிகளிலும் இருநாட்டு பார்ட்னர்ஷிப்பை விரிவுப்படுத்தியது, இந்தியா- வெனிசுலா உறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு தலைவர்கள் ஒப்புக் கொண்டனர் என பிரதமர் மோடி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • அஜித் பவார் மறைவால் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
    • அவரது மனைவி சுனேத்ராவை தலைவராக மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விமான விபத்தில் காலமானார். இவர் துணை முதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக தயாராக இருந்தால், தேசியவாத சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பது அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் நாளை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி நாளை கூடுகிறது. இதில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என அக்கட்சியின் தலைவரும், மாநில அமைச்சருமான சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புஜ்பால் கூறுகையில் "தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனேத்ராவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தால், சனிக்கிழமை துணை- முதல்வராக பதவி ஏற்க இருந்தாலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும். சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார். ஏராளமான தலைவர்கள் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    இவ்வாறு புஜ்பால் தெரிவித்தார்.

    288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிராவில் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 40 உறுப்பினர்கள் உள்ளனர். அஜித் பவார் காலமானாதால் பாராமதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

    சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை.

    • மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது
    • அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல்

    மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி ஸ்ரீ மகா காலேஸ்வரர் கோயிலில் நடைமுறையில் உள்ள விஐபி தரிசனத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, சமீபத்தில் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு.

    "மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, கோயிலுக்குள் யார் எப்போது நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வாயிற்காவலராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளது. 

    மேலும் கோயில் சன்னதிக்குள் நுழைவது மற்றும் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்துவது என்பது கோயில் நிர்வாகம் மற்றும் மாநில அதிகாரிகளின் நிர்வாக ரீதியான முடிவே தவிர, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து மதம் சார்ந்த சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் எச்சரித்தது.

    அப்போது பேசிய தலைமை நீதிபதி,

    கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையீட்டிற்கு வரம்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஐபி நுழைவு அனுமதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. நாங்கள் நீதித்துறை சார்ந்த பிரச்சினையில் இருக்கிறோம்.

    சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) கருவறைக்குள் பொருந்தும் என்று நாம் கருதினால், மக்கள் சட்டப்பிரிவு 19 (பேச்சுரிமை) போன்ற பிற உரிமைகளையும் கோருவார்கள். முதலில், வேறொருவர் உள்ளே செல்வதால் எனக்கும் உள்ளே செல்ல உரிமை உண்டு என்பீர்கள்; பிறகு, எனக்குப் பேச்சுரிமை இருப்பதால் இங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க எனக்கு உரிமை உண்டு என்பீர்கள். அதன் பிறகு அனைத்து அடிப்படை உரிமைகளும் கருவறைக்குள் கோரப்படும்," என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து தர்பன் அவஸ்தி என்பவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், "VIP" என்பது எந்தச் சட்டத்திலோ அல்லது விதியிலோ வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சியர் செயல்படுத்தும் நிர்வாக விருப்புரிமை சார்ந்த விஷயம் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மனுதாரர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

    மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள்;

    "கருவறைக்குள் நுழைவதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். "VIP அந்தஸ்து என்ற பெயரில் குடிமக்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியாது.

    ஒரு நபர் 'கர்ப்பகிரகத்திற்குள்'நுழைகிறார் என்றால், அது பெரும்பாலும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையால் மட்டுமே நடக்கிறது. ஒரு சாதாரண பக்தருக்கும் தெய்வத்திற்கு தண்ணீர் வழங்கும் அதே உரிமை இருக்கவேண்டும். அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல் இருக்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.

    • ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை
    • நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், ராகுல் காந்தியை தெளிவான பார்வை கொண்ட தலைவர் என்றும், மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல்என்றும் பாராட்டியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

    சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டிய சசி தரூர், "மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.

    தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் கூறினார்.

    மேலும், "நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார். 

    • பட்ஜெட்டில் 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை என மதிப்பீடு.
    • டிசம்பர மாதம் வரை 8.55 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை என சிஏஜி தகவல்.

    மத்திய அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது கிடைக்கப்பெறும் வருமானம், செலவினம் ஆகியவற்றை கணக்கீடு செய்து தோராயமான நிதி பற்றாக்குறை வெளியிடப்படும்.

    அதன்படி 2025-26-ஆம் நிதி ஆண்டிக்கான பட்ஜெட்ல், ஜிடிபி-யில் 4.4 சதவீதம் அல்லது 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படலாம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் டிசம்பர் மாதம் வரை நிதி பற்றாக்குறை 8.55 லட்சம் கோடி ரூபாய் அல்லது 54.5 சதவீதம் என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது இதே காலக்கட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் 56.7 சதவீதமாக இருந்தது.

    டிசம்பர் மாதம் வரை 25.25 கோடி ரூபாய் அல்லது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதில் 72.2 சதவீதம் வருவாய் பெறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ. 33.8 லட்சம் கோடியாக இருந்தது. இது 2025-26 ஆம் ஆண்டுக்கான தொடர்புடைய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 66.7 சதவீதம் ஆகும்.

    • விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.

    மும்பையில் அமெரிக்க பெண்ணிடம் 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 வசூல் செய்த டாக்சி டிரைவர் கைது செய்யப்ட்டுள்ளார். 

    பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா அரியானோ என்ற அமெரிக்கப் பெண், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வேலை விஷயமாக மும்பை வந்துள்ளார்.

    விமான நிலையத்தில் இருந்து அருகிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல டாக்சியில் ஏறியுள்ளார்.

    ஹோட்டல் மிக அருகிலேயே 400 மீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், டிரைவர் அந்தப் பெண்ணை அந்தேரி பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் சுற்றிக் காட்டி, நீண்ட தூரம் அழைத்துச் செல்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    இறுதியில் ஹோட்டலில் இறக்கிவிட்ட போது, கட்டணமாக ரூ.18,000 (200 டாலர்) கேட்டு மிரட்டிப் பெற்றுள்ளார்.

    கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண் தனது கசப்பான அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வீடியோவாகப் பதிவிட்டார்.

    அதில் அந்த டாக்ஸியின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

    எனவே இந்த பதிவை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். டாக்ஸி எண்ணை வைத்துத் தேடியதில், சஹார் கிராமத்தைச் சேர்ந்த தேஷ்ராஜ் யாதவ் (50) என்ற டிரைவர் பிடிபட்டார்.

    அவர் பயன்படுத்திய டாக்சி பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    ×