என் மலர்
இந்தியா

மத்திய பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? - நிபுணர்கள் கணிப்பு
- கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
- தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதார ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு, வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு என்பதை பொறுத்தமட்டில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுவசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தெரிகிறது.
அதேபோன்று மருந்து பொருட்களில் அரசின் கவனம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுகாதாரத்தில் நவீனத்துவம் பற்றிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிகிறது. கல்விச்செலவை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் இருக்கலாம்.
வருமான வரி விதிப்பு வரம்பை பொறுத்தமட்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பழைய வரி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, புதிய வரி முறையை நோக்கி அரசாங்கம் செல்லக்கூடும் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் விலை குறைந்தது.
இதனால், பட்ஜெட்டில் இந்த பொருட்கள் மீதான விலைத்தாக்கம் பெரிய அளவில் ஏற்றமாகவோ, இறக்கமாகவோ இருக்காது என கூறப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு புதிய ரெயில் திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்திருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து எழுச்சி பெறும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.






