என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் - அஜித்பவார் மனைவி துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்
    X

    மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் - அஜித்பவார் மனைவி துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்

    • எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
    • அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பது தான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித்பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித்பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "அஜித்பவார் குடும்பத்தை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரி ஆவதற்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம். துணை முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் உடன்படுகிறோம்" என்றார்.

    Next Story
    ×