search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மேலும் ஒருவர் விலகல்

    உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் கட்சி வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது.

    இங்கு பா.ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரேலி கண்டோன்மென்ட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்ரியா ஆரோன் காங்கிரசில் இருந்து திடீரென்று விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் கட்சி வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது பெயர் ஹைதர் அலிகான். இவர் கடந்த 13-ந்தேதி சுவார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவரது தந்தை நவாப் காசிம் அலிகான், ராம்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஹைதர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா கூட்டணியில் உள்ள அப்னாதளம் (சோனேலால்) கட்சியில் இணைந்தார்.

    காங்கிரசில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு அக்கட்சியில் இருந்து விலகும் 2-வது வேட்பாளர் இவர் ஆவார். அப்னாதளம் கட்சியில் சேர்ந்ததற்கான காரணம் தொடர்பாக ஹைதர் அலிகான் கூறியதாவது:-

    என்னுடைய தொகுதியில் வளர்ச்சி பணிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்னாதளம் கட்சியில் இணைந்தேன். அந்த கட்சியின் தலைவர் அனுபிரியா படேலின் தலைமையால் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக உத்தர பிரதேச அரசு மகத்தான மக்கள் பணிகளை ஆற்றியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் நான் இந்த முடிவை எடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைதர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக அவரது தந்தை நவாப் காசிம் அலிகான் கூறுகையில், ‘‘நான் இன்னமும் ராம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகத்தான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் எண்ணம் எனக்கு கிடையாது’’ என்றார்.

    Next Story
    ×