search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதயாத்திரையில் பங்கேற்ற தொண்டர்கள் (கோப்பு படம்)
    X
    பாதயாத்திரையில் பங்கேற்ற தொண்டர்கள் (கோப்பு படம்)

    மேகதாது பாதயாத்திரையை தற்காலிகமாக திரும்ப பெற்றது காங்கிரஸ்

    கொரோனா 3வது அலை குறைந்த பின்பு, மேகதாதுபாதயாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு கடந்த 9-ம் தேதி பாதயாத்திரை தொடங்கியது. ஆனால், கொரோனா பரவலுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை செல்ல ஏன் அனுமதித்தீர்கள் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

    இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை செல்ல கர்நாடக அரசு தடை விதித்தது. பாத யாத்திரையை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியிருந்தார். மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என்றும் அவர்  தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

    இந்நிலையில் மேகதாது பாத யாத்திரையை நிறுத்துவதாக கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பாதயாத்திரை நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கொரோனா 3வது அலை குறைந்த பின்பு, பாதயாத்திரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கூறியதன் பேரில் பாதயாத்திரை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி சித்தராமையா கூறுகையில், ‘5 நாட்கள் யாத்திரை வெற்றியடைந்துள்ளது. பெங்களூருவில் பாதயாத்திரையை முடிக்க திட்டமிட்டிருந்தோம். கொரோனா மூன்றாவது அலை காரணமாக யாத்திரையை இப்போதைக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்றார்.

    ஐந்தாம் நாளான இன்றைய பாதயாத்திரையில் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    Next Story
    ×