search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி.ஆர்.பாலு
    X
    டி.ஆர்.பாலு

    நீட் தேர்வில் விலக்கு - உள்துறை அமைச்சகத்தில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மனு

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
    புதுடெல்லி:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

    ஆனால், நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்திவிட்டு வந்தார். ஆனாலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில்தான் உள்ளது. 

    மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப  வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    மேலும், மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகை அலுவலகம் சென்று ஜனாதிபதியின் செயலாளரிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு மனு அளித்துள்ளது. அதில், நீட் மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்றும், அரசியலமைப்பு சட்டப்படியே கோரிக்கையை முன் வைத்துள்ளதாகவும் கூறினார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர்தான் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×