search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோவா விடுதலை நாள் விழாவையொட்டி புதிய திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
    X
    கோவா விடுதலை நாள் விழாவையொட்டி புதிய திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    கொரோனா தடுப்பூசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது - கோவா மாநிலத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

    போப் பிரான்சிஸ் இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    பனாஜி:

    போர்ச்சுகீசியர் வசம் இருந்த கோவா விடுதலை பெற்றதன் 60 வது ஆண்டு விடுதலை நாள்  கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கோவா  தலைநகர் பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் அவர் அஞ்சலி செலுத்தினார். 




    விடுதலை நாள் கொண்டாட்டத்தையொட்டி கோவா துறைமுகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாய்மர படகுகள் அணி வகுப்பை பிரதமர் பார்வையிட்டார்.  தொடர்ந்து அகுவாடா கோட்டை சிறைச்சாலையில் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம், கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு, புதிய கோவா மாவட்ட மருத்துவமனை,  மொபா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் உள்பட பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  பின்னர் ஷியாம் பிரசாத் முகர்ஜி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவா சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விருது வழங்கி பிரதமர் கௌரவித்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 

    நாட்டின் பிற பகுதிகள் மொகலாயர்கள் வசம் இருந்த போது கோவா மாநிலம் போர்ச்சுகல் ஆட்சியின் கீழ் இருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கோவா இந்தியாவை மறக்கவில்லை. இந்தியா கோவாவை மறக்கவில்லை. கோவாவின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் நேர்மை கோவா மக்களுக்கான அவரது கடும் உழைப்பு மற்றும் திறனை இந்த நாடு நினைவு கொள்கிறது. ஒருவர் தமது மாநிலத்திற்காக எப்படி அர்ப்பணிப்புடன் செயல்பட முடியும் என்பதை பாரிக்கரின் வாழ்கை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். 

    கோவா விடுதலை நாள் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

    நான் இத்தாலி சென்றிருந்தபோது வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். அப்போது போப் பிரான்சிஸ் சொன்னார், இது எனக்கு நீங்கள் அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு என்று.  இது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நமது ஜனநாயகத்தின் மீதான அவரது அன்பை வெளிப்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை கோவா மாநிலம் முழுமையாக செயல்படுத்தி உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக நான் கோவா மாநிலத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு தமது பேச்சின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
    Next Story
    ×