search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பையில் 144 தடை
    X
    மும்பையில் 144 தடை

    ஒமைக்ரான் பரவலை தடுக்க அதிரடி: மும்பையில் 31-ந்தேதி வரை 144 தடை

    ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
    மும்பை :

    உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

    தற்போது அந்த வைரஸ் உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நோய் இந்தியாவில் பரவுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் அது எந்த பலனும் தரவில்லை. வெளிநாட்டு பயணிகள் மூலமாக இந்தியாவிற்குள் அந்த வைரஸ் நுழைந்து உள்ளது.

    தற்போது நாட்டில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் இதுவரை 13 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மும்பையில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு இன்று அதிகாலை 12.01 மணி முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். இதன்படி அடுத்த 14 நாட்களுக்கு நகரில் பேரணி, பொது கூட்டம், போராட்டம் எதையும் நடத்த முடியாது.

    இதேபோல பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.

    இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வௌியிட்டுள்ள தகவலில், கொரோனா தடுப்பு குறித்து அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல சிறிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ளவேண்டும், ஆயிரம் நபருக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அது குறித்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதுதவிர மராட்டியத்துக்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது 72 மணிக்கு நேரத்துக்கு முன் எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முடிவுடன் வர வேண்டும்.

    இதேபோல ஓட்டல்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் கூறினார். மேலும் பல புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு விரைவில் அறிவிக்கலாம், என்றார்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் மக்கள் அதிகளவில் பொது இடங்களில் கூடுவார்கள். அதனாலும் ஒமைக்ரான் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு நகரில் வருகிற 31-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 28 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் மேலும் 4 பேருக்கு நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 2 பேர் உஸ்மனாபாத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மும்பையையும், மற்றொருவர் புல்தானாவையும் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் 16 முதல் 67 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 4 பேருக்கு நோய் பாதிப்பு அறிகுறிகள் இல்லை. இவர்களுடன் சேர்த்து இதுவரை ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    உஸ்மனாபாத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டவர் சார்ஜா சென்று வந்தவர். மற்றொருவர் அவருடன் தொடர்பில் இருந்தவர். புல்தானாவை சேர்ந்தவர் துபாய் சென்று வந்து உள்ளார். மும்பையில் பாதிப்பு கண்டறியப்பட்டவர் அயர்லாந்தில் இருந்து வந்தவர். இவர்கள் 4 பேரும் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர்.

    மராட்டியத்தில் அதிகபட்சமாக மும்பையில் 13 பேரும், புனே மாவட்டத்தில் 12 பேரும், உஸ்மனாபாத்தில் 2 பேரும், கல்யாண் டோம்பிவிலி, நாக்பூர், லாத்தூர், வசாய் விரார், புல்தானா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் குணமடைந்து உள்ளனர்.
    Next Story
    ×