search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
    X
    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

    323 எம்.பி.க்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்- சபாநாயகர் ஓம்பிர்லா தகவல்

    தடுப்பூசி போடாதவர்கள், பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவோம்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்திற்கொண்டு, பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு13-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது.

    இதையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும். இதுவரை 323 எம்.பி.க்கள் முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 23 எம்.பி.க்கள், மருத்துவ காரணங்களுக்காக, ஒரு டோஸ் கூட போட இயலவில்லை.

    தடுப்பூசி போடாதவர்கள், பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்பு ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவோம்.

    இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கும். காலை 11 மணிக்கு சபை கூடும்.

    பாராளுமன்ற, சட்டசபைகளின் நிகழ்ச்சிகள் ஒரே மொபைல் செயலியில் கொண்டு வரப்படும். இதற்காக, அசாம் மாநில சட்டசபை சபாநாயகர் ஹிதேஷ் கோஸ்வாமி தலைமையில் இ-விதான் கமிட்டி அமைக்கப்பட்டது. அவர் இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பிறகு நடக்கும் சபாநாயகர்கள் மாநாட்டில் அந்த அறிக்கையை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கப்படும்.

    இதன்படி, பாராளுமன்ற இரு அவைகளின் நிகழ்ச்சிகளை மொபைல் செயலியில் நேரடி ஒளிபரப்பாக காணலாம். வருங்காலத்தில், பல்வேறு மாநில சட்டசபை நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பாக பார்க்கலாம்.

    தற்போது, 11-வது மக்களவை முதல் 17-வது மக்களவை வரையிலான நிகழ்ச்சிகள், இந்த செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல், 1854-ம் ஆண்டு முதல் 10-வது மக்களவை வரையிலான நிகழ்வுகளும், ஆவணங்களும் இதில் சேர்க்கப்படும். பின்னர், மாநில சட்டசபைகளின் நிகழ்ச்சிகளும் இணைக்கப்படும்.

    இது, எம்.பி.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    கடந்த கூட்டத்தொடரின்போது, நோட்டீசுகள், கேள்விகள் ஆகியவற்றை மின்னணு முறையில் அனுப்புமாறு எம்.பி.க்களை ஊக்கப்படுத்தினோம். 92 சதவீத எம்.பி.க்கள் அப்படி அனுப்பி வைத்தனர். மழைக்கால கூட்டத்தொடரில் 100 சதவீத எம்.பி.க்களும் இதை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
    Next Story
    ×