search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி
    X
    தடுப்பூசி திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

    தடுப்பூசி செலுத்தும் வேகம் திருப்தி அளிக்கிறது -பிரதமர் மோடி

    இதுவரை நாட்டின் 128 மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விரிவாக விளக்கினர். வயது வாரியாக தடுப்பூசி போடப்பட்ட தகவல்கள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

    வரும் மாதங்களில் தடுப்பூசி சப்ளை மற்றும் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது. வயது வந்தோரில் சுமார் 5.6 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    தடுப்பூசி திட்டம் குறித்து அளிக்கப்பட்ட விளக்கம்

    மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிக அளவாக, கடந்த ஆறு நாட்களில் 3.77 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். 

    தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. எனினும், இதுவரை நாட்டின் 128 மாவட்டங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. 16 மாவட்டங்களில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

    இந்த வாரத்தில் தடுப்பூசி போடும் வேகம் அதிகரித்திருப்பது குறித்து, பிரதமர் திருப்தி தெரிவித்ததோடு, இந்த வேகத்தில் முன்னோக்கி செல்வது முக்கியம் என்று வலியுறுத்தினார். 


    அப்போது, தடுப்பூசி மக்களை விரைவில் சென்றடைய புதுமையான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துவதற்காக, மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதுபோன்ற முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

    இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×