search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    சர்க்கரை ஆலைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

    மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய சர்க்கரை கூட்டுறவு ஆலைகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
    மும்பை :

    கொரோனா 2-வது அலை மராட்டியத்தில் கடும் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவ உபகரணங்கள், சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக நோயாளிகளின் உயிரை காக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

    இதையடுத்து நிறுவனங்கள் தயாரிக்கும் ஆக்சிஜன் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள தாராசிவ் சர்க்கரை கூட்டுறவு ஆலை ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது.

    இந்த நிறுவனம் எத்தனால் திட்டத்தை ஆக்சிஜன் ஆலையாக மாற்றியுள்ளது. இதன்மூலம் தினசரி 96 சதவீத தூய்மையுடன் 6 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும்.

    இதனை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கொரோனா 2-வது அலையை வெல்ல மாநிலம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டி உள்ளது. நமது ஆக்சிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1,200 மெட்ரிக் டன்னாக உள்ளது. தேவை 1,700 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் நாம் தன்னிறைவை பெற முடியும்.

    மாநகராட்சிகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன. சர்க்கரை கூட்டுறவு ஆலைகளும் இதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ள ஆஸ்பத்திரிகள் சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
    Next Story
    ×