search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் தடுப்பூசி திட்டம் சூடு பிடிக்கிறது - இதுவரை 14½ கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி

    மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா, பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தடுப்பூசி திட்டம் சூடு பிடிக்கிறது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 14½ கோடியை கடந்துள்ளது.

    இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி அவசர பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. அதையடுத்து ஜனவரி 16-ந் தேதி இந்தியாவில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45-60 வயதாகி இணை நோயுடன் போராடுவோர், 45 வயதான அனைவர் என முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கோப்புப்படம்


    அடுத்தகட்டமாக மே 1-ந் தேதி முதல் 18 வயதான அனைவரும் தடுப்பூசி செலுத்த தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள். இந்த சூழலில் தடுப்பூசி திட்டம் இந்தியாவில் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுவரை இந்தியாவில் 14 கோடியே 52 லட்சத்து 71 ஆயிரத்து 186 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இவர்களில் 93 லட்சத்து 24 ஆயிரத்து 770 சுகாதார பணியாளர்கள் முதல் டோசும், 60 லட்சத்து 60 ஆயிரத்து 718 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

    முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 21 லட்சத்து 10 ஆயிரத்து 258 பேர் முதல் டோஸ், 64 லட்சத்து 25 ஆயிரத்து 992 பேர் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர்.

    60 வயதுக்கு மேற்பட்டோர் 5 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் முதல் டோஸ், 87 லட்சத்து 31 ஆயிரத்து 91 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

    45-60 வயதினரில் 4 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து 238 பேர் முதல் டோசும், 26 லட்சத்து 92 ஆயிரத்து 376 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா, பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் (67.3 சதவீதம்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    தடுப்பூசியின் 101-வது நாளில் (நேற்று முன்தினம்) 31 லட்சத்து 74 ஆயிரத்து 688 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இவர்களில் 19 லட்சத்து 73 ஆயிரத்து 778 பேர் முதல் டோசும், 12 லட்சத்து 910 பேர் இரண்டாவது டோசும் போட்டுக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×