search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    அரியானாவில் ருசிகரம் - திருடிய தடுப்பூசிகளை போலீசாருக்கு திருப்பி அனுப்பிய திருடன்

    திருடிய கொரோனா தடுப்பூசிகளை போலீஸ் நிலையம் அருகே திருடன் வைத்துச் சென்ற சம்பவம் அரியானாவில் அரங்கேறியுள்ளது.
    சண்டிகர்:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக, கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருத்துகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிகழ்வுகளில் அரங்கேறி வருகிறது.

    அந்த வகையில், அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்களை திருடன் நேற்று முன்தினம் திருடிச் சென்றான்.

    சேமிப்பு கிடங்கின் கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 1,270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை திருடி சென்றுள்ளான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருடன் எழுதிய மன்னிப்பு கடிதம்

    இந்நிலையில், தான் திருடிய கொரோனா தடுப்பூசிகளை திருடனே ஜிண்ட் மாவட்ட போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை வைத்து சென்று சென்றுள்ளான்.

    போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு நேற்று மாலை சென்ற அந்த திருடன் டீக்கடைக்காரரிடம் ஒரு பையை கொடுத்துள்ளான். மேலும், தான் போலீசாருக்கு உணவு டெலிவெரி செய்து வருவதாகவும்,வேறு இடத்திற்கு விரைவாக செல்ல இருப்பதால் இதை போலீசாரிடம் கொடுத்து விடும்படியும் அந்த பையை டீக்கடையில் வைத்து விட்டு சென்றான்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக டீக்கடைக்கு சென்று டீக்கடைக்காரரிடம் திருடன் கொடுத்த பையை சோதித்தனர்.

    அந்த பையில் ஜிண்ட் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொரோனா தடுப்பூசிகளுடன் ஒரு கடிதம் இருந்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்தக் கடிதத்தில் 'இது கொரோனா தடுப்பூசி என்று எனக்கு தெரியாது... மன்னித்து விடுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.

    திருடிய கொரோனா தடுப்பூசிகளை திருடனே மீண்டும் போலீஸ் நிலையம் அருகே வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×