search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள்
    X
    மும்பையில் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள்

    60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

    இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
    புதுடெல்லி:

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனைகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர். 

    இந்த, இரண்டாம் கட்ட தடுப்பூசி பணிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

    தடுப்பூசி போட விரும்புவோர் முன்கூட்டியே தங்களின் பெயர்களை மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள், கோவின் செயலி போன்றவற்றில் பதிவு செய்து கொள்ளலாம். பெயர், முகவரியுடன், ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யவேண்டும். 

    45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான மருத்துவ சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்றும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

    முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களின் தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்றது. அதே போல் இம்முறை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மூத்த குடிமக்களின் தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன. இருப்பினும் மக்களே சுய விருப்பத்தின்பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, முன்பதிவு செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×