search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய சங்க பிரதிநிதி
    X
    விவசாய சங்க பிரதிநிதி

    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

    விவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய
    சங்க பிரதிநிதிகளுடன் இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    மத்திய அரசு சார்பில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தன.

    இதனால், 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை (11-ம் கட்ட பேச்சுவார்த்தை) வரும் 22-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது.  

    பேச்சுவார்த்தை தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்களை ஏற்கனவே ஒன்றையாண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டதாக மத்திய அரசு கூறியது. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் எந்த உபயோகமும் இல்லை. சட்டத்தை முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.

    வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றையாண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டதற்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அந்த குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.

    விவசாயிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பபெற வேண்டும் என அரசை வலியுறுத்தினோர். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை தரும்படியும் மத்திய அரசு கேட்டுள்ளது.   

    என்றனர்.

    மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்களை 1 முதல் ஒன்றரையாண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக கூறினோம். அந்த முடிவை விவசாயிகள் தீவிரமாக கருதியதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    இது தொடர்பாக நாளை விவாதித்து 22-ம் தேதி தங்கள் முடிவை அறிவிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

    பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாக உணர்கிறேன். 22-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படலாம்.

    என்றார்.
    Next Story
    ×