search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி- சில்லா, காசிப்பூர் எல்லைகள் மூடப்பட்டன

    டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எதிரொலியாக சில்லா மற்றும் காசிப்பூர் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 46வது நாளாக நீடித்து வருகிறது.

    இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 8 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே டெல்லியில் கடந்த 8ந்தேதி மீண்டும் 8வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.  அதில், இரு தரப்பிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து, வருகிற 15ந்தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்பு கொண்டனர்.

    டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது.  பல இடங்களிலும் பனி அடர்ந்து காணப்படுகிறது.  குறைந்தபட்ச வெப்பநிலை இன்று 10 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக, சில்லா மற்றும் காசிப்பூர் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.  இதனால், நொய்டா மற்றும் காசியாபாத் நகரில் இருந்து டெல்லி செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  அந்த வழியே செல்பவர்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதன்படி, வாகனத்தில் டெல்லி செல்ல விரும்புபவர்கள் ஆனந்த் விஹார், டி.என்.டி., போப்ரா மற்றும் லோனி ஆகிய எல்லை பகுதி வழியே செல்லும்படி டெல்லி போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
    Next Story
    ×