search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை - பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு

  வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்
  புதுடெல்லி:

  வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையை பிரதமர் மோடி கண்டித்துள்ளார். சட்ட விரோத போராட்டங்களால், ஜனநாயக செயல்முறைகளை தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என அவர் கூறி உள்ளார்.

  உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.

  இந்த வெற்றியை டிரம்ப் ஏற்கவில்லை.

  தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள், கோர்ட்டுகளில் செல்லுபடியாகவில்லை.

  இந்த நிலையில், ஜோ பைடன் வெற்றியை உறுதிசெய்து, சான்று அளிக்கும் நடைமுறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கொடிகளுடனும், பதாகைகளுடனும் அங்கு முற்றுகையிட்டனர். அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வன்முறையில் இறங்கினர்.

  போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. முன் எப்போதும் நடந்திராத இந்த வன்முறை, உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

  இந்த வன்முறையை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

  வாஷிங்டனில் நடந்துள்ள கலவரம் மற்றும் வன்முறை தொடர்பான செய்திகளை கண்டு மன வேதனை அடைந்தேன். ஒழுங்குமுறையுடனும், அமைதியுடனும் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும். சட்ட விரோத போராட்டங்கள் வழியாக ஜனநாயக செயல்முறைகளை தகர்த்து எறிவதை அனுமதிக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

  நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா:- ஜனநாயகம் என்பது வாக்களிக்கும் நபர்களின் உரிமை. அவர்களின் குரலைக் கேட்டு, பின்னர் அந்த முடிவை அமைதியாக நிலைநிறுத்துவது. அது கும்பலால் செய்யப்படுவது அல்ல.

  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்:- வாஷிங்டனில் நடைபெற்ற கலவரங்கள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறை செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். சிறந்த அமெரிக்க ஜனநாயக பாரம்பரியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துக்கு அரசாங்கத்தை அமைதியான முறையில் மாற்றுவதை எதிர்பார்க்கிறோம்.

  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்:- அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது அவமரியாதையான காட்சிகள். அமெரிக்கா உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை குறிக்கிறது. இப்போது அங்கு அமைதியான மற்றும் ஒழுங்கான அதிகார பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம்.

  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:- எங்கள் நெருங்கிய நட்பு நாடும், அண்டை நாடுமான அமெரிக்காவில் ஜனநாயகம் மீதான தாக்குதலால் கனடா மக்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் வருத்தத்துடனும் உள்ளனர். மக்களின் விருப்பத்தை மீறி வன்முறை ஒருபோதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

  ஈரான் அதிபர் ஹசன் ருஹானி:- நாம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கண்டது மேற்கத்திய ஜனநாயகம் எவ்வளவு பலவீனமானது மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்பதை காட்டுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் நாட்டையே அழிவுப்பாதைக்கு அழைத்து சென்றுவிட்டார்.

  இவ்வாறு தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
  Next Story
  ×