search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் முதலில் கொரோனா பாதிப்பு குறைந்த அளவிலே இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் டெல்லியில் 7,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,03,084 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் ஒரே நாளில் மாநிலத்தில் 131 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,943 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 42,458 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல என்றும், இது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

    மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், டெல்லி அரசு தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இனி முக கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×