search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூல்

    பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் பெங்களூருவில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் தங்களது செல்போனில் படம் பிடித்து, அதன்மூலம் அவர்களது வீட்டுக்கே அபராதம் விதிப்பதற்கான ரசீதுவை அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த 4-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை ஒரு வாரத்தில் பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.4 கோடியே 2 லட்சத்து 62 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 97 ஆயிரத்து 213 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா தெரிவித்துள்ளார்.

    இவற்றில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக மட்டும் 2,517 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சத்து 4,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுபோல, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்றதாக 30 ஆயிரத்து 712 வாகன ஓட்டிகள் மீதும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்று 19 ஆயிரத்து 403 வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் கொரோனா பீதி காரணமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதை போலீசார் கைவிட்டுள்ளனர். ஏனெனில் வாகன ஓட்டிகள் மதுஅருந்தி உள்ளார்களா? என்று சோதனை நடத்தும்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், போலீசாருக்கு பரவ வாய்ப்புள்ளது. அதனால் குடிபோதையில் வாகன ஓட்டுபவர்களை பரிசோதிப்பதை போலீசார் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு வாகன ஓட்டி மீது மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×