search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விவசாயிகளை அழித்து முதலாளிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் மோடி அரசு - ராகுல் காந்தி கடும் தாக்கு

    விவசாயிகளை அழித்து, பெரும் முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணியாற்றி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்றும் பெரு நிறுவனங்களுக்கு உதவக்கூடியவை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கானவை, அவர்களின் வருவாயை அதிகப்படுத்தும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளை அழித்து, பெரும் முதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காகவே மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணியாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-

    2014-ம் ஆண்டு தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வோம் என்று மோடி பேசினார். ஆனால், 2015-ம் ஆண்டு, சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க முடியாது என்று மோடி அரசு கோர்ட்டில் தெரிவித்தது. 2020-ம் ஆண்டு கறுப்பு வேளாண்மைச் சட்டங்கள் வந்துள்ளன.

    மோடியின் உள்நோக்கம் தெளிவாக இருக்கிறது. அவர் தன்னுடைய புதிய வேளாண் பரிசோதனையைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய பெருமுதலாளி நண்பர்களின் வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு விலை கொடுக்கிறார். அவர்களுக்காகவே பணியாற்றி வருகிறது மோடி அரசு.

    இவ்வாறு அவர் தெரிவிதித்துள்ளார்.
    Next Story
    ×