search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு நாளை 70-வது பிறந்தநாள் - பா.ஜனதா சார்பில் நாடு முழுவதும் 3 வாரம் கொண்டாட்டம்

    பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் 3 வாரங்களுக்கு கொண்டாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு நேற்று முன்தினமே பா.ஜனதாவினர் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர். நாடு முழுவதும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை, அதாவது சுமார் 3 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்களை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதையொட்டி பா.ஜனதாவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். குறிப்பாக சுற்றுப்புற பாதுகாப்புக்காக நகர்ப்புற மக்களுக்கு துணிப்பைகள் வழங்குதல் மற்றும் இலவச கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல், ரத்த தானம், பிளாஸ்மா தான முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனர்.

    பிரதமர் மோடி பா.ஜனதா தொண்டராக இருந்தபோது கடந்த 1986-ல் நாடு குறித்த தனது லட்சியங்கள் மற்றும் கவலைகள் தொடர்பாக தனது தாய் தெய்வத்துக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய புத்தகம், அவரது பிறந்தநாளையொட்டி நாளை வெளியிடப்படுகிறது. குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம் அந்த மொழியில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    அதை பிரபல சினிமா விமர்சகரும், எழுத்தாளருமான பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார். ‘தாய்க்கு கடிதங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆங்கில புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.

    இது குறித்து பாவனா கூறுகையில், ‘ஒரு டைரியைப்போல 1986-ம் ஆண்டில் பிரதமர் மோடி எழுதி வைத்திருந்த கடிதங்களில் அவரது யோசனைகளை பார்த்து ஈர்க்கப்பட்டேன். அவரது அனுமானங்கள் சுவாரஸ்யமானவை. அவரது உணர்வுகளின் வெளிப்படைத்தன்மை, தீவிரத்தன்மை, தனது பாதிப்பை மறைக்காத குணம் போன்ற உண்மைகளால் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×